நேற்று சர்வதேச சந்தையில் தாமிரம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன் எதிரொலியாக, ‘ஹிந்துஸ்தான் காப்பர்’ பங்கு விலையும் 5 சதவீதம் உயர்ந்தது. நடப்பு 2026ம் ஆண்டில், இதுவரை தாமிரம் விலை 17 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
வரும் நாட்களில் தாமிரம் விலை எப்படி இருக்கும்; அதில் முதலீடு செய்வது எப்படி உள்ளிட்டவை பற்றி கமாடிட்டி சந்தை நிபுணர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்ததாவது:
நடவடிக்கை
சர்வதேச சந்தையில் தாமிரம் விலை 14,500 டாலரை தாண்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா அதிகளவில் தாமிரத்தை இறக்குமதி செய்து வருவதும், 2027ல் தாமிரம் உள்ளிட்ட அடிப்படை உலோகங்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு முக்கிய காரணங்கள்.
வரி விதிப்பு தொடர்பான கொள்கை முடிவு ஜூன் இறுதியிலேயே எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில், அமெரிக்க நிறுவனங்கள் தாமிரத்தை அதிகளவில் வாங்கி சேமித்து வருகின்றன. இதனால் காமெக்ஸ் சந்தையில் தாமிரம் விலை உயர்ந்து வருவதுடன், உலக சந்தையிலும் தாமிரத்தின் விலை அதிகரித்து உள்ளது.
கமாடிட்டிகள் ஏற்றம்
டாலர் மதிப்பு இறங்கியுள்ளதும் தாமிரம் விலை உயர மற்றொரு காரணமாக உள்ளது. அடிப்படை உலோகங்கள், வேளாண் கமாடிட்டிகள் உட்பட, பெரும்பாலான கமாடிட்டிகள் கடந்த ஒரு மாதத்தில் சராசரியாக 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.
உற்பத்தி பாதிப்பு
பல்வேறு சுரங்கங்களில் தாமிர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தாமிர உற்பத்தி கடந்த ஜூலையில் 9 சதவீதம் குறைந்து உள்ளது. பழைய சுரங்கங்கள் முதிர்வடைந்து வரும் சூழலில், புதிய சுரங்கங்களுக்கு பெருமளவில் முதலீடுகள் கிடைக்கவில்லை.
ஆனால், தாமிரத்துக்கான டிமாண்டு உயர்ந்து வருகிறது. இவை அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததால், தாமிரம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்றம் தொடருமா? தாமிர விலை ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. முதல் இலக்காக தாமிரம் விலை 18,000 டாலரை தொடக்கூடும்.
முதலீடு செய்யலாமா? கமாடிட்டிகளை பொறுத்தவரை விலை குறைவாக இருக்கும்போது வாங்க வேண்டும், விலை ஏற்றத்தில் இருக்கும்போது படிப்படியாக விற்று லாபத்தை எடுக்க வேண்டும். விலை குறைவாக இருக்கும்போது ரிஸ்க்கும் குறைவாக இருக்கும்.
இப்போது தாமிரம் விலை ஓரளவுக்கு உயர்ந்து வந்துவிட்டதால், ‘நடுத்தர ரிஸ்க்’ நிலையில் உள்ளது. ஆக, தாமிர விலை ஏற்றத்துக்கான வாய்ப்புகள் இருந்தாலும், முன்பை விட ரிஸ்க் அதிகரித்துள்ளது. செய்திகளின் அடிப்படையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால், 5 ஆண்டுகால நோக்கில் முதலீடு செய்ய சாதகமான சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
