‘காலேஜில் ஹீரோ மாதிரி… கோபம் வந்தா இங்கிலீஷ்ல திட்டிடுவாரு’: சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை கலாய்த்த சவுமியா அன்புமணி

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, சட்டப்பேரவையின் சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகர், அவையை நடுநிலையோடு வழிநடத்துவதிலும், அனைத்துத் தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனநாயக முறையில் கருத்துகளைப் பதிவு செய்ய வாய்ப்பளிப்பதிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்து வருகிறார். பேரவையின் கண்ணியத்தையும் மரபுகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் அவர், கடுமையான சூழல்களிலும் நகைச்சுவையுடனும் திருக்குறள்களை மேற்கோள்காட்டியும் அவையைத் தளர்த்தும் நயமிக்க அணுகுமுறையைக் கொண்டவர். அதே நேரத்தில், அவையின் விதிகளுக்கு மாறாக நடப்போரைத் தனது கண்டிப்பான நடவடிக்கைகளாலும், இயல்பான ஆளுமையினாலும் நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி மன்றத்தை அமைதியுடன் நடத்தி வருவது அனைத்து உறுப்பினர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, பேசிய பா.ம.க எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி, “கல்லூரி ஒன்றில், ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வந்திருந்தார். அங்கே ஒரே கை தட்டல் சத்தம், நான் முதலமைச்சர் விஜய்தான் வருகிறாரோ என்று நினைத்துவிட்டேன். அந்த அளவுக்கு அவருக்கு கை தட்டல். அது ஒரு மகளிர் கல்லூரி. ஹீரோ மாதிரி வந்தார்.” என்று கூறினார். 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “ஒரு விஷயம், நான் மேடை ஏறி பேசுகிறபோது நான் வருகிறபோது, இருந்த கை தட்டலை விட, இந்த அரங்கத்தில் நான் நிற்பதற்கு காரணம் சி.ஜோசப் விஜய் என்று சொன்னவுடன் அரங்கத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.” என்று கூறினார். இதை சவுமியா அன்புமணியும் ஆமோதித்தார்.

தொடர்ந்து பேசிய சவுமியா அன்புமணி, “காலையில்கூட நான் 2 வார்த்தை சொல்லி இருந்தேன். ஆனால், நீங்கள் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தீர்கள். அதாவது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடிய ஒரு சபாநாயகர். யாராக இருந்தாலும் அது தப்பு என்றால் தப்புதான். நீங்கள் பெல் அடித்தால் நான் பயப்படுவேன் பாருங்கள், அவர் பெல் அடித்தாலும் பரவாயில்லை, நீங்கள் கூடுதலாக 5 நிமிடம் பேச வேண்டும் என்று பின்னாடி டிரெயினிங் கொடுத்து அனுப்புவார்கள். இல்லை, இல்லை, சபாநாயகர் பெல்கூட அடிக்க வேண்டாம். சபாநாயகர் கண்ணைக்காட்டினாலே நான் இருக்கிற பாயிண்ட்டை எல்லாம் வேகமாக சொல்லி முடித்துவிடுவேன். அவருக்கு கட்டுப்பட்டுதான் நாம் இந்த சபையில் இருக்கிறோம். இந்த இடத்தில் அவருதான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி. அவரைக் கோபப்படுத்தக்கூடாது. ஏனென்றால், அவருக்க் கோபம் வந்தால்,  இங்கிலீஷில் திட்டிவிடுவார். ”என்ன இப்படி பண்ணுறீங்க, ஐ அம் நாட் அலோவ்டு” என்று பேசுவார். அவ்வளவு நேரம் தமிழில் திருக்குறல் எல்லாம் சொல்லிக்கொண்டு வருவார். கோபம் வந்தால் இங்கிலீஷ்தான்.” என்று கலாய்த்து சிரித்தார்.

அப்போது அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து ஆரவாரம் எழுப்பினர். அதனால், அவர் இங்லீஷில் ஏதாவது சொல்லிவிடப் போகிறார் என்று நான் வேகவேகமாக முடித்துவிடுவேன். அந்த அளவுக்கு உங்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது, பாசம் இருக்கிறது. நானும் இங்கே முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்தான். எனக்கு சபாநாயகர்கள் எல்லாம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று தெரியாது. சொல்வார்கள் கேட்டு தெரிந்துகொள்வோம். நிஜமாகவே ஒரு ஜனநாயகத்தோடு, எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து, புதியவர்களுக்கு உற்சாகம் கொடுத்து, நடுநிலைமையாக நீங்கள் நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இந்த 17-வது சட்டமன்றத்தில் சபாநாயகர் தலைமையின் கீழ் பணியாற்றுவதை மிகமிகப் பெருமையாகக் கருதுகிறோம்” என்று சவுமியா அன்புமணி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை ஜாலியாகப் புகழ்ந்து பேசினார்.

சபாநாயகர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையேயான இந்த நகைச்சுவையான உரையாடல், காரசாரமான அரசியல் விவாதங்களுக்கு நடுவே சட்டமன்றத்தில் ஒரு சுமுகமான ஜனநாயகச் சூழலை ஏற்படுத்தியது. முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான சவுமியா அன்புமணியின் இந்த இயல்பான பேச்சுக்கு அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவையில் இருந்த அனைவரும் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். இறுதியாக, அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பளித்து நடுநிலையோடு அவையை வழிநடத்தும் சபாநாயகரின் தலைமைத்துவத்திற்குப் பாராட்டுத் தெரிவித்து சவுமியா அன்புமணி தனது உரையை நிறைவு செய்தார்.

Source link