திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி கவுரவ தலைவர் ராஜகோபால் 88, மனைவி வனிதா 77, ஒரே நாளில் காலமானார்கள். மரணத்திலும் பிரியாத தம்பதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை மன்னர் கல்லூரியில் கவுரவ தலைவராக இருந்தவர் பொறியாளர் ராஜகோபால். இவரது மனைவி வனிதா.
ராஜகோபால் 1981ல் கல்லுாரி செயலாளராகவும், அடுத்து துணைத் தலைவராவும், 9 ஆண்டுகள் தலைவராகவும், கவுரவ தலைவராகவும் இருந்தார். தமிழ்நாடு நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் இண்டஸ்ட்ரி சேர்மனாகவும், மதுரை உற்பத்தி திறன் குழு முன்னாள் தலைவர்,
மடீட்சியா முன்னாள் தலைவர், மதுரை யூனியன் கிளப் முன்னாள் தலைவர், தமிழ்நாடு சிறு குறு தொழில் அதிபர்கள் சங்க முன்னாள் தலைவர், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரிகளின் பொதுச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.
இவரது மனைவி வனிதா நேற்று காலை 8:30 மணி அளவில் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், மனைவி இறந்த துக்கத்தில் நேற்று மாலை 5:30 மணிக்கு அவரும் காலமானார்.
ஒரே நாளில் இருவரும் காலமானது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவரான ஸ்ரீதர் தற்போது மன்னர் கல்லுாரி செயலாளராக உள்ளார்.
