– சிறப்பு நிருபர் –
சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த வழக்கில் இருந்து, குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னையை அடுத்த போரூரில் ஆறு வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த 2017ல் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் கைதான தஷ்வந்துக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார்.
பல கட்ட தேடுதல் நடவடிக்கைக்கு பின் கைதான தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த 2018ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி 2025ல் விடுதலை செய்தது.
முன்னதாக தாயை கொன்ற வழக்கிலும் அவர் விடுதலை செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே சமயம், உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் கடைசி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு வரவுள்ளது.
