டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாடு: வெள்ளியன்று மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு; உறுதிபடுத்திய கிரெம்ளின் மாளிகை

Written by: Shubhajit Roy

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடனான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் 90% ரஷ்யா தனது சொந்த தேசிய நாணயங்கள் மூலமாகவே மேற்கொண்டு வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் செப்டம்பர் 12–13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது வெள்ளிக்கிழமை அன்று இந்தியப் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்ய ஊடகமான ‘ஸ்புட்னிக் இந்தியா’ ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பத்திரிகையாளர்களுடனான இணையவழி உரையாடலில் விரிவாகப் பேசிய அவர், எங்கள் 2 தலைவர்களும் மிக நெருக்கமான, நடைமுறை சார்ந்த (pragmatic) நட்புறவைக் கொண்டுள்ளனர். உலகளாவிய முக்கிய பிரச்னைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விவாதிக்கும் அளவுக்கு அவர்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறார்கள். கொள்கை மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு நெகிழ்வான அமைப்பாக பிரிக்ஸ் செயல்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

எப்போதும் போல, மோடி–புதின் சந்திப்பிலும் இருதரப்பு விவகாரங்கள் பேசப்படும். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மிக விரிவான தளத்தைக் கொண்டுள்ளது. நமது கூட்டுறவின் வளர்ச்சியைத் தடுக்க முனையும் சில ‘நட்பற்ற நாடுகள்’ உள்ளதால், பல விஷயங்கள் பொதுவெளியில் பேச முடியாது. எனவே, மேலைநாடுகளின் பொருளாதாரத் தடை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மிக ரகசியமாகவும் அதே சமயம் ஆக்கப்பூர்வமாகவும் பல முடிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய நிறுவனங்கள் ரஷ்ய சந்தையில் முதலீடுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளன; அதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்.

மேற்கு ஆசியப் போரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிய அவர், அமீரகம் மற்றும் ஈரான் இடையேயான உறவில் தற்போது சிக்கல்கள் நிலவுவது உண்மையே. ரஷ்யாவின் நல்ல நண்பர்களான இந்த நாடுகள் இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க வேண்டும் என விரும்புகிறோம்; தேவைப்பட்டால் உறவை இயல்பாக்க உதவ ரஷ்யா தயாராக உள்ளது. இந்தப் பதற்றம் பிரிக்ஸ் கூட்டுப் பிரகடன அறிக்கையைத் தயாரிப்பதில் சவாலை ஏற்படுத்தினாலும், இந்தியத் தலைமையின் கீழ் உள்ள திறமையான தூதர்கள் இரு நாடுகளின் நலன்களையும் சமன் செய்யும் வகையிலான சரியான வாசகங்களைக் கண்டறிவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

உக்ரைன் போருக்கு ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளே காரணம் என்று குறிப்பிட்ட பெஸ்கோவ், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் எங்கள் நிலைப்பாடும் பெரிதும் ஒத்துப்போகின்றன. அமைதி வழியிலான தீர்வையே நாங்களும் விரும்புகிறோம். ரஷ்யா இந்த போரை ஒருபோதும் விரும்பவில்லை; முன்பே தொடங்கப்பட்ட ஒரு போரை நிறுத்தவே நாங்கள் முயல்கிறோம். அமைதித் தீர்வுக்குப் பங்களிக்க முன்வரும் இந்தியாவின் விருப்பத்தை வரவேற்கிறோம். அதேபோல், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகளையும் வரவேற்கிறோம். மாஸ்கோ மற்றும் கீவ் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்றும், விரைவில் அமைதியான தீர்வு எட்டப்படும் என்றும் நம்புகிறோம் என்றார்.

ரஷ்யா மீதான தடைகள் குறித்துப் பேசிய அவர், சர்வதேச வர்த்தகத்தில் வரம்புகளை விதிப்பதும், மூன்றாம் தரப்பு நாடுகளை மிரட்டுவதும் சர்வதேச சட்டத்தின்படி முற்றிலும் சட்டவிரோதமானது என்றார். இந்தியாவுக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகம் குறித்து எண்களைக் குறிப்பிட மறுத்த அவர், ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்து வருகிறோம் என்று தெரிவித்தார். ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்தை இந்தியத் தரப்பு மிகத் தீவிரமாக எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தது. தற்போது போர்க்களத்தில் உள்ள இந்தியக் குடிமக்களைப் பட்டியலிடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள். இது தொடர்பாக இந்திய அரசுடன் மிக நெருக்கமான தொடர்பில் உள்ளோம் என்று உறுதியளித்தார்.

இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பு வெறும் வாங்குதல்-விற்பதுடன் நின்றுவிடாமல், கூட்டுத் தயாரிப்பு வரை நீண்டுள்ளது என்று கூறிய அவர், எஸ்-400 ஏவுகணை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்துக் குறிப்பிடுகையில், ரஷ்யா தனது ஒப்பந்தக் கடமை நிறைவேற்றும் திறனைக் கொண்டுள்ளது; அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். மேலும், சுகோய்-57 போர் விமானங்கள் குறித்து, இது உலகின் அதிநவீன விமானங்களில் ஒன்று. இதனை இந்தியாவிற்கு விற்பனை செய்வது பரிசீலனையில் உள்ளது. இந்தியா இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைக் கோருகிறது; இது தொடர்பான கூடுதல் விவாதங்கள் நடந்து வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு என்பது இயல்பாகவே மிக உணர்வுப்பூர்வமானது, எனவே அதன் செயல்திறன் கருதி இதை ரகசியமாக முன்னெடுப்பதே சிறந்தது என்றார்.

பிரிக்ஸ் அமைப்பு எந்தவொரு தனிப்பட்ட நாட்டுக்கும் எதிரானது அல்ல. அது தனது உறுப்பு நாடுகளின் நலன்களுக்காகச் செயல்படுகிறது. உலகளாவிய இருப்பு நாணயங்களான டாலர் மற்றும் யூரோவைப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து பறித்தது. அதனால் நாங்கள் எங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்தத் தொடங்கினோம். இது டாலருக்கு எதிரான கொள்கை அல்ல; அமெரிக்காவே தனது டாலர் மீதான நம்பிக்கையைச் சிதைத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் தங்களின் தேசிய நாணயங்களை நோக்கி நகர்கின்றன. ஒருதுருவ உலக அமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது; இந்தியா போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கும் புதிய பன்முக உலக அமைப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று பெஸ்கோவ் தெரிவித்தார்.

Source link