மின்சாரக் கொள்முதல், நிலக்கரி நிர்வாகக் குளறுபடி; டான்ஜெட்கோவிற்கு ரூ.9,500 கோடி இழப்பு: சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல்

தமிழ்நாட்டின் முக்கியப் பொதுத்துறை நிறுவனமான டான்ஜெட்கோ (Tangedco), அனல் மின் நிலையப் பராமரிப்புத் தாமதம், நிலக்கரி கொள்முதல் குளறுபடிகள் மற்றும் திட்டங்களை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகச் சுமார் ரூ.9,500 கோடி வரை தவிர்க்கக்கூடிய கூடுதல் செலவினத்தைச் சந்தித்துள்ளதாகப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (சி.ஏ.ஜி) தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது என்று டி.டி நெக்ஸ்ட் (DT Next) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (Tangedco) அனல் மின் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (சி.ஏ.ஜி) சிறப்புத் தணிக்கை அறிக்கை செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நிலக்கரி கொள்முதல் மற்றும் அனல் மின் நிலைய பராமரிப்பில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் டான்ஜெட்கோவிற்கு சுமார் ரூ.9,500 கோடி அளவுக்குத் தவிர்க்கக்கூடிய கூடுதல் செலவினமும் நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையின் முக்கியக் குறிப்புகள்:

1. மின் பராமரிப்புத் தாமதம் மற்றும் கூடுதல் செலவு:

அனல் மின் நிலையங்களில் உரிய காலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், சீரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், அதிக விலை கொடுத்து வெளியில் மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, சுமார் ரூ.9,500 கோடி அளவுக்குக் கூடுதல் செலவானது.

2. நிலக்கரி கொள்முதல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள்:

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் உயர்விலை: போதுமான நிலக்கரி இருப்பு இல்லாததாலும், அதிக விலைக்கு நிலக்கரியைக் கொள்முதல் செய்ததாலும் ரூ.3,900 கோடிக்கும் அதிகமான கூடுதல் செலவு ஏற்பட்டது.

விலை நிர்ணய முறை: இறக்குமதி நிலக்கரிக்கு ‘மாறும் விலை முறைக்கு’ (Variable-price method) பதிலாக ‘நிலையான விலை முறையை’ (Firm-price method) பின்பற்றியதால் ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டது.

தரமற்ற நிலக்கரி: குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை ஏற்றுக்கொண்டதால், கூடுதல் அளவில் நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ரூ.1,500 கோடி வீணானது.

இழப்பீடு கோராத நிலை: 2001 முதல் 2024 வரையிலான காலத்தில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒப்பந்ததாரர்களிடம் இழப்பீடு கோர ஒப்பந்தத்தில் வழி இருந்தும், டான்ஜெட்கோ இழப்பீட்டைக் கணக்கிடவோ கோரவோ இல்லை. மேலும், 17.55 லட்சம் டன் நிலக்கரிக்கு எவ்விதத் தரப்பரிசோதனையும் செய்யப்படவில்லை.

3. திட்டங்கள் தாமதம்:

மார்ச் 2023-க்குள் நிறைவடைந்திருக்க வேண்டிய அனல் மின் திட்டங்கள் இன்னமும் 18% முதல் 94% வரையிலான நிலையிலேயே அரைகுறையாக நின்று கொண்டிருக்கின்றன. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (சி.இ.ஆர்.சி) 50 மாத காலக்கெடுவை விட 13 முதல் 56 மாதங்கள் வரை தாமதமாகியுள்ளன. இதனால், கட்டுமானக் காலத்தில் வட்டித் தொகை மட்டும் சுமார் ரூ.3,600 கோடி அதிகரித்துள்ளது.

4. உதய் திட்டம் மற்றும் கடன் சுமை:

உதய் (UDAY) திட்டம் டான்ஜெட்கோவின் நிதி நிலைமையைச் சீரமைக்கத் தவறிவிட்டது. திட்டத்தின் படி, டான்ஜெட்கோவின் கடனில் 75% தொகையை (ரூ.56,317 கோடி) மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி அரசு 34.38% தொகையை (ரூ.22,815 கோடி) மட்டுமே ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாக, டான்ஜெட்கோவின் நிலுவைக் கடன் மார்ச் 2020-க்குள் ரூ.81,312 கோடியிலிருந்து ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்தது. மேலும், மின்சார விநியோகச் செலவிற்கும் பெறப்பட்ட வருவாய்க்கும் இடையிலான இடைவெளியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

2018-19 காலகட்டத்துடன் முடிந்த முந்தைய தணிக்கை அறிக்கையிலும் நிலக்கரி நிர்வாகத்தில் இதே போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அந்தச் சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாக சி.ஏ.ஜி தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

Source link