பல தசாப்தங்களுக்கு பிறகு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மாற்றம்!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 1954ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முழு நீளத் திரைப்படங்கள் மற்றும் புனைவல்லாத திரைப்படங்கள் என இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் குழு அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. 

முதலில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பின்பு குடியரசு தலைவர் முன்னிலையில் அவரது மாளிகையில் விருது வழங்குவது வாடிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டார்கள். இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் மட்டும் இனி நடத்தாமல் பல்வேறு பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 72வது தேசிய விருதுகள் செப்.22ல் குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னால் 1970ஆம் ஆண்டு 17-வது தேசிய திரைப்பட விருது விழா சென்னையில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல தசாப்தங்களுக்கு பிறகு இப்போது இடம் மாற்றி நடக்கவுள்ளது. 

Source link