முதல்வர் விஜய் லண்டன் பயணம்: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் உறுதி

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்குவது தள்ளிப்போவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் அருண்ராஜ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்க நினைப்பதுபோல், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகவே இத்திட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. நீங்கள் ஊகிப்பதுபோலவே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்தான் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தினார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என த.வெ.க அறிவித்திருந்தது. அதன்படி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், முதலமைச்சரின் பயணத் திட்டம் காரணமாக இத்திட்டம் தொடங்கும் தேதி மாற்றப்பட்டு, செப்.25-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என்ற தகவலை அமைச்சர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது. அது 916 தங்கம் தானா என முறையாகப் பரிசோதனை செய்த பிறகே இத்திட்டத்திற்குத் தங்கம் அனுப்பப்படும். பயனாளர்களும் மோதிரத்தின் தரத்தை நேரில் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மேலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜையின் (Bone Marrow) தேவை அதிகளவில் இருப்பதால், பொதுமக்கள் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முன்வர வேண்டும். ரத்த தானம், கண் தானம் போன்றே ஸ்டெம் செல் (Stem Cell) தானத்திற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Source link