வரலாறு காணாத மழை; வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்: ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்குமா?

2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பானின் மத்திய நகரமான நகோயாவில், நேற்று செவ்வாய்க் கிழமையன்று பெய்த வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஏராளமான சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின. மேலும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர்

இருப்பினும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக முன்கூட்டியே அங்கு வந்திருந்த விளையாட்டு வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நகர மேயர் இச்சிரோ ஹிரோசாவா இன்று புதன்கிழமை தெரிவித்தார். “போட்டி நடைபெறும் இடங்களின் நிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை; திட்டமிட்டபடி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தற்காலிகக் குடியிருப்புகளாக மாற்றப்பட்ட ‘ஷிப்பிங் கன்டெய்னர்களில்’ (சரக்குக் கொள்கலன்கள்) தங்கியிருந்த சுமார் 400 விளையாட்டு வீரர்களும் பணியாளர்களும், பலத்த மழையின்போது சிறிது நேரம் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஹிரோசாவா தெரிவித்தார். போட்டி நடைபெறும் பல இடங்களில் கூரைகளில் கசிவு ஏற்பட்டதைத் தவிர, வேறு பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று, இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) 503 பேர் கொண்ட இந்தியக் குழுவினருக்கான வழியனுப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தது; இதில் பல விளையாட்டு வீரர்களும் அணிகளும் கலந்துகொண்டனர். ஹாக்கி அணிகள் மற்றும் முன்னணி தடகள வீரர்கள் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு வீரர்களும் அணிகளும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை; ஏனெனில் அவர்கள் ஏற்கனவே போட்டி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்திருந்தனர் அல்லது தங்கள் இறுதிக்கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். சீனாவின் ஹாங்சூவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 28 தங்கம் உட்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. 

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை விட அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் 19 அன்று நகோயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன.

ஆசியாவின் 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். ஒப்பிட்டுப் பார்க்கையில், 2024-ல் பாரிஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 10,700 விளையாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதற்கிடையில், செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக, ஐச்சி-நகோயா விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் வழக்கமான ‘வீரர்கள் தங்கும் கிராமம்’ (athletes village) அமைக்கும் முறையைக் கைவிட்டுள்ளனர். அதற்குப் பதிலாக, இதில் பங்கேற்கும் சுமார் 17,000 வீரர்களுக்கு மூன்று வகையான தங்குமிட வசதிகள், அதாவது சொகுசுப் பயணிகள் கப்பல், ஹோட்டல் அறைகள் மற்றும் கன்டெய்னர்ககள் (containers) வழங்கப்பட்டுள்ளது. 

Source link