வத்நகர் டூ வாரணாசி வரை யாத்திரை; களமிறங்கும் இன்ஃப்ளூயன்சர்கள்: மோடியின் 25 ஆண்டு கால பொது வாழ்க்கையை கொண்டாட பா.ஜ.க மெகா பிளான்

Written by: Lalmani Verma 

பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத்தின் வத்நகருக்கும், அவரது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும் இடையே புனித நீர் பரிமாற்றம் செய்வது முதல், அவரது தலைமையிலான நாட்டின் மாற்றங்களை வெளிப்படுத்த சமூக ஊடகப் பிரபலங்களை (Influencers) முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது வரை, பல்வேறு அம்சங்களுடன் கூடிய 13 பிரம்மாண்ட திட்டங்களை பா.ஜ.க இறுதி செய்துள்ளது.

முதலில் குஜராத் முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் நரேந்திர மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிறந்தநாளான செப்.17 முதல் அக்.17 வரை ஒரு மாத காலத்திற்கு ‘சேவா சங்கல்ப் அபியான்’ (Seva Sankalp Abhiyan) என்ற பெயரில் நாடு முழுவதும் இந்நிகழ்ச்சிகளை பா.ஜ.க நடத்தவுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை’ அமையும். இதன் கீழ், மோடி ஆட்சிக் காலத்தில் மாற்றமடைந்த இடங்களாக (பரிவர்த்தன்காரி ஸ்தல்) கருதப்படும் சுமார் 50 இடங்களை ஆளும் பா.ஜ.க தேர்வு செய்யும். இன்ஃப்ளூயன்சர்கள், பதிவர்கள் (Bloggers) மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content creators) இந்த இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுவர். அவர்கள் கள நிலவரத்தை நேரில் பார்த்து, தங்கள் சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

பொதுப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இடங்களை அடையாளம் காணுமாறு மாநிலக் கட்சிப் பிரிவுகளுக்கு பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கரின் பஸ்தார், குஜராத்தின் கிஃப்ட் சிட்டி (GIFT City) மற்றும் ஐ-கிரியேட் (iCreate) போன்ற கண்டுபிடிப்பு மையங்களை உதாரணமாகக் கட்சித் தலைமை சுட்டிக்காட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், பாதுகாப்பு வழித்தடம், விரைவுச் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை இந்த பயணப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

செப்.17 அன்று 76-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி, கடந்த 2024 ஜூன் 9 அன்று தொடர்ந்து 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். முன்னதாக, 2014 மே 26 அன்று நாட்டின் 15-வது பிரதமராகவும், 2019 மே 30 அன்று 2-வது முறையாகவும் அவர் பதவியேற்று இருந்தார். பிரதமராவதற்கு முன்பு, 2001 அக்டோபர் முதல் 2014 மே வரை 4 முறை குஜராத் முதல்வராகப் பதவி வகித்து, அம்மாநிலத்தின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் முதன்முதலில் 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

மோடியின் “ஜன்மபூமி”யான குஜராத்தின் வத்நகருக்கும், அவரது “கர்மபூமி”யான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்த, இவ்விரு நகரங்களிலிருந்தும் ‘ஜல், ஜன் மற்றும் சேவா சங்கல்ப் யாத்திரை’ நடத்தப்படவுள்ளது. 250 இருசக்கர வாகனங்களில் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட சுமார் 500 பா.ஜ.க தொண்டர்கள், வத்நகரில் உள்ள சர்மிஷ்டா ஏரியிலிருந்து புனித நீரைச் சேகரித்து வாரணாசிக்குக் கொண்டு சென்று, காசி விஸ்வநாதர் கோயிலில் ‘ஜலாபிஷேகம்’ செய்வர். அதேபோல், வாரணாசியில் இருந்து கங்கை நீரை எடுத்துக்கொண்டு மற்றொரு தொண்டர்கள் குழு பைக் மூலம் வத்நகருக்குப் புறப்படும்.

இந்த 20 குழுக்களும் தனித்தனி வழிகளில் பயணித்து, 2027 பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத்தில் அதிக நாள்களைச் செலவிடும். வழியெங்கும் எல்இடி திரைகள் மூலம் குறும்படங்களைத் திரையிட்டு, அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடம் பேசி அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வர். நாள்தோறும் 60 முதல் 80 இடங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.

செப்.17 அன்று, பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டப் பயனாளிகள் மற்றும் கரோனா தடுப்பூசி பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ‘ஆசீர்வாத விளக்கு’ (மண் அகல் விளக்கு) ஏற்றுவார்கள். 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ (Viksit Bharat) என்ற மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைப்பார்கள். செப்.17 முதல் அக்.7 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ‘25 கோடி குழந்தைகளின் கனவு பாரதம்’ என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மோடியின் பொது வாழ்வு மாற்றங்களை விவரிக்கும் 30 நிமிட வீதி நாடகங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படும். இதற்கான வீடியோக்கள், திரைக்கதைகள் மற்றும் மேடைப் பொருட்களை பாஜக வழங்கும். இவை சமூக வலைதள ரீல்ஸ்களாகவும் பகிரப்படும். செப்.25 முதல் அக்.7 வரை ‘ஆங்கன் கா உத்சவ்’ என்ற பெயரில் அங்கன்வாடி ஊழியர்கள் கௌரவிக்கப்படுவர். அரசுத் திட்டங்களால் வாழ்க்கையில் மாற்றம் கண்ட 25 லட்சம் பேரின் ஊக்கமளிக்கும் கதைகளைத் திரட்டும் தேசிய அளவிலான ‘கஹானி பத்லாவ் கி’ போட்டி நடத்தப்படும். 60 வினாடி ரீல்ஸ் பதிவு செய்யப்பட்டு அமைச்சர்கள் மூலம் பகிரப்படும். அக்.7 அன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அகண்ட ஜோதி’ ஏந்திய வாகனத்துடன் கூடிய பேரணிகள் நடைபெறும்.

ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், இலவச மருத்துவ முகாம்கள் என 25 வகையான சேவைகளை உள்ளடக்கிய ‘சேவா மேரா யோக்தான்’ திட்டம், தொகுதிதோறும் அரசுத் திட்டங்களை மக்கள் பெற உதவும் ‘சேவா சேது அபியான்’ முகாம்களும் நடைபெறும். 108 மீட்டர் ‘பாரத் மண்டல்’ ரங்கோலியும் வரையப்படும். மகாராஷ்டிரா, குஜராத், பெங்களூரு, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 5 இடங்களில் பள்ளி/கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான தேசிய கண்டுபிடிப்பு சவால் (Innovation Challenge) நடத்தப்படும். ஒரு மாத கால பிரச்சாரத்தின் நிறைவு நாளான அக்.17 அன்று, ‘ஜன்சேவக் மஹாகும்பம் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை’ என்ற பெயரில் பிரம்மாண்ட மாநாடு டெல்லி, வாரணாசி, குருகிராம் அல்லது சூரஜ்குண்ட் ஆகிய இடங்களில் ஒன்றில் நடைபெறும்.

கிராம ஊராட்சித் தலைவர்கள் (சர்பஞ்ச்) முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1.25 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் இதில் ஒன்றுகூடி பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். இதில் பங்கேற்பவர்கள் அனைவரும் இணைந்து ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து 6 சரணங்களையும் ஒருமித்த குரலில் பாடி, கின்னஸ் உலக சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரால் ‘விக்சித் பாரத் சங்கல்ப்’ தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மத்திய-மாநில அரசுகளின் முழு ஒருங்கிணைப்புடன் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்குத் தினசரி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசின் திட்டப் பயனாளிகளை மையமாகக் கொண்டு இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

Source link