நமது நிருபர்
மும்பையின் இஸ்கான் ஜூஹு வளாகத்தில் உள்ள கோவிந்தாஸ் உட்பட 3 உணவகங்களின் உரிமங்களை சஸ்பெண்ட் செய்து, மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவரது அதிரடி நடவடிக்கைகள் தான், தினமும் மும்பையில் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக மக்களுக்கு சுகாதாரமான நல்ல உணவு கிடைக்க வேண்டும், என்பதே இவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது.
அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை உணவகங்களில் சோதனையிடும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். சோதனை என்பது பெயரளவில் நடப்பது மட்டுமல்ல, உணவகங்களின் சமையலறை வரை சென்று சுகாதாரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டுகின்றனர். இதனால் உணவகங்களில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இருந்தாலும், மும்பையில் தினமும் இவரது தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவகங்களில் தொடர் சோதனை நடத்துவதை நிறுத்தவில்லை.கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்வது அழிப்பதும், உடனடியாக உணவகங்களுக்கு சீல் வைப்பதுமாக அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 9) மும்பை ஜுஹு இஸ்கான் வளாகத்தில் உள்ள உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உணவகங்களின் சமையலறைகளில் சுகாதாரக் குறைபாடுகள், பூச்சிகள் தொல்லை, தேங்கிய கழிவுநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
உடனடியாக, கோவிந்தாஸ் உட்பட 3 உணவகங்களின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த உணவகங்களை மீண்டும் அனுமதி வழங்கும் வரை திறக்க கூடாது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
