தமிழக அரசியல் களம் இளம் அரசியல்வாதிகள் கையில் தஞ்சம் அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளராக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார் என்ற அறிவிப்பு வெளியானபோதே, சட்டசபையில் விஜய் – உதயநிதி தான் என்று உறுதி ஆகிவிட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், புதிய கட்சியான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக சாதனை படைத்தது. ஆளும் கட்சியாக தேர்தல் களத்தில் இறங்கிய தி.மு.க தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும் தோல்வியை சந்தித்தனர். குறிப்பாக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
அதே சமயம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்ற அறிவிப்பு வந்தவுடன், சட்டசபையில் விஜய் – உதயநிதி நேருக்கு நேர் அமர்வார்கள் என்று கணிக்கப்பட்டது. அதன்படி, உதயநிதி தி.மு.க.வில் எதிர்க்கட்சிதர் தலைவர் ஆனார். சட்டசபையில் முதல்வர் விஜய் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. உதயநிதி கேள்வி கேட்பதும் அதற்கு விஜய் பதில் சொல்வதும் பரபரப்பாகி வருகிறது.
விஜய் – உதயநிதி இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். விஜய் உதயநிதியின் சீனியர். அதே சமயம், விஜய் அரசியலுக்கு புதியது என்றாலும், அவர் தி.மு.க.வின் கேள்விகளுக்கு சரியான பதிலடியும் கொடுத்து வருகிறார், முதல்முறை சட்டசபையில் விஜய் பேசும்போது, ஃபார்ட்டி பண்ட் என்று சொன்னவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வெளிநடப்பு செய்தது. அதேபோல், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, 1970-களில் இருந்து தி.மு.க. ஊழல் குறித்து விஜய் பேசினார்.
அவரின் பேச்சுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்காததால் அப்போதும் தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இவ்வாறு விஜய் சட்டசபையில் உரையாற்றிய 2 முறையும், தி.முக. வெளிநடப்பு செய்த நிலையில், வெளியில் வந்து சட்டபை ஷூட்டிங் ஸ்பாட் போல் இருக்கிறது. பஞ்ச் டைலாக் பேசுகிறார் என்று உதயநிதி கூறி வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் சட்டசபையில் மோதிக்கொண்டாலும், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இன்னும் சொல்லப்போனால், உதயநிதி சினிமாவில் அறிமுகமானதே விஜய் படத்தில் தான்.
விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்ததன் மூலம் தான் உதயநிதி சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கினார். அதன்பிறகு, நடிகராக அறிமுகமான உதயநிதி தற்போது அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு சரியாக இருந்தபோது ஒருமுறை, உதயநிதியின் பிறந்த நாளுக்காக விஜய் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அரசியலில் உதயநிதியின் செயல்பாடுகள் குறித்து பேசிய விஜய், ‘பயங்கரமா பண்ணுற ப்பா’ என புகழ்ந்து கூறியதாகவும், அதற்கு உதயநிதியோ ‘சரி அண்ணா சரி அண்ணா’ என்று கூறியதாகவும் தகவல்கள் உள்ளது.
இப்படி இருந்த நட்பு தற்போது எதிரும் புதிருமாக மாறியுள்ளது. தற்போது இவர்கள் இருவருமே அரசியலில் முக்கிய இடத்தில் உள்ள நிலையில், வரும் காலங்களில் இவர்கள் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.
