ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில் பல்வேறு மொழிகள் மற்றும் புதிய கதைகள் திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்க மிஸ் செய்தவர்கள் கூட, ஒடிடி தளங்களில் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்திருக்கும் சூழல் தான் நிலவி வருகிறது.
அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற விஸ்வநாத் அண்ட் கோ உட்பட தென்னிந்திய சினிமாவில் வெளியான முக்கிய படங்கள் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் – நெட்பிளிக்ஸ் (Netflix)
சூர்யா மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இது ஒரு தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான சஞ்சய் விஸ்வநாத்தைச் சுற்றி நடக்கும் இந்த படத்தின் கதை, சுதந்திரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் அவர், பின்னர் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறார். அவரது வாழ்க்கையில் மேடி என்ற மருத்துவ மாணவி எதிர்பாராத விதமாக நுழைகிறார். அவர் படிப்படியாக சஞ்சயின் குடும்பத்துடன் நெருக்கமாகிறார்.
வயது வித்தியாசம் இருந்தபோதிலும், இருவருக்கும் இடையிலான உறவு வளர்கிறது. ஆனால் இந்தக் கதை வழக்கமான காதல் முடிவை நோக்கிச் செல்லாமல் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியை முடித்துவிட்டு மேடி திரும்பி வருகிறார். இதன் மூலம் சஞ்சயும் அவரது குழந்தையும் மீண்டும் மேடியின் வாழ்க்கையில் இடம்பெறுகின்றனர். இந்த படம் செப்டம்பர் 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
வரவு – ஜீ 5 (ZEE5)
ஆக்ஷன் மற்றும் பழிவாங்கும் கதைகளை விரும்புபவர்களுக்கு வரவு திரைப்படம் இந்த வார இறுதியில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த மலையாளத் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், போலச்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வந்தரான தோட்ட உரிமையாளரான போலச்சன், சிறையில் சில காலம் கழித்த பின்னர் கேரளாவின் மலைப்பகுதியில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
அவரது வருகை அமைதியை ஏற்படுத்தவில்லை. பழைய பகைமைகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் மீண்டும் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை, சக்திவாய்ந்த நில உரிமையாளர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பனிமூட்டம் நிறைந்த ஒரு தோட்ட நகரத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதிகமான பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பாமல், குடும்பப் பிரச்சினைகள், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
வாணி விஸ்வநாத் மற்றும் முரளி கோபி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். திரைக்கதையை ஏ.கே. சாஜன் எழுதியுள்ளார். வரவு’ திரைப்படம் 2026 செப்டம்பர் 11 முதல் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.
பஞ்சநாமா – ஜீ 5 (ZEE5)
மர்மம் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக பஞ்சநாமா’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த தெலுங்குத் திரைப்படத்தின் கதை, திறமையான காவல் அதிகாரியான ஜெய்யைச் சுற்றி நகர்கிறது. தனக்கு நெருக்கமான ஒரு சிறுவனின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறப்படும் விளக்கத்தை அவர் ஏற்க மறுக்கிறார். முதலில் விபத்து என்று தோன்றும் அந்தச் சம்பவம், பின்னர் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதனால் ஜெய் மேலும் தீவிரமாக விசாரணையில் இறங்குகிறார்.
விசாரணை ஆழமடையும்போது, மறைக்கப்பட்ட ரகசியங்கள், விளக்கம் அளிக்க முடியாத சம்பவங்கள் மற்றும் உண்மையை வெளிவராமல் தடுக்க முயலும் செல்வாக்குமிக்க நபர்கள் குறித்து அவர் அறிந்து கொள்கிறார். ஒவ்வொரு தகவலையும் இணைத்துப் பார்க்கும் ஜெய்யின் விசாரணை, படிப்படியாக மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. பாரத் ஸ்ரீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாஜி, மேதா ரெட்டி, சரண் பாபு, ரூபா லட்சுமி, ராதிகா ப்ரீத்தி, சூர்யா மற்றும் ஸ்ரீஜா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 11 முதல் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
பிரின்ஸ் ஆஃப் மோலிவுட் – ஜியோ ஹாட் ஸ்டார் (JioHotstar)
ஒரு வளர்ந்து வரும் நடிகர், திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்ற தனது கனவு உண்மையில் நல்ல முடிவு என்பதைச் செல்வந்தரான தனது தந்தையை எப்படி சம்மதிக்க வைப்பார்?இதுதான் ‘பிரின்ஸ் ஆஃப் மோலிவுட்’ திரைப்படத்தின் மையக் கதையாகும். டெய்ன் டேவிஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த மலையாள நகைச்சுவை-நாடகத் திரைப்படத்தை ஷானி காதர் இயக்கியுள்ளார்.
டேவிஸ், ஃபிரோஸ் என்ற இளைஞராக நடித்துள்ளார். திரைப்படத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற ஃபிரோஸின் ஆசை மட்டுமே பிரச்சினையாக இருப்பதில்லை. அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் தங்களது சொந்தப் பிரச்சினைகளுடன் அவரது திட்டங்களில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
வித்யா விஜயகுமார், நிர்மல் பாலாழி, ஹரிஷ்மா, ஃபுக்ரு மற்றும் அஸ்வின் விஜயன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ள பிரின்ஸ் ஆஃப் மோலிவுட்’ 2026 செப்டம்பர் 11 அன்று Jஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
மகுடம் – ப்ரைம் வீடியோ (Prime Video)
‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் விஷால் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கினார். குடும்ப மோதலை மையமாகக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் விரியும் கதையுடன் உருவாகியுள்ள இந்த தமிழ் ஆக்ஷன் நாடகம் பல்வேறு காலங்களின் சம்பவங்களை இணைக்கிறது. 1965 முதல் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த நபரான லிங்காவையும், அவரிடமிருந்து விலகி அமைதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழும் அவரது மகன் கிருபாகரனையும் சுற்றியே கதை நகர்கிறது.
கிருபாவின் குடும்பத்தைப் பாதிக்கும் ஒரு முக்கியமான சம்பவத்திற்குப் பிறகு, இருவரின் உலகங்களும் மீண்டும் ஒன்றிணைகின்றன. லிங்காவின் வருகையால் புதைக்கப்பட்ட உணர்வுகளும் சிக்கலான கடந்தகாலமும் மீண்டும் வெளிப்படுகின்றன. இதுவே தந்தை–மகன் மோதலுக்கான அடித்தளமாக அமைகிறது. விஷால் இயக்கியுள்ள மகுடம்’ திரைப்படம் 2026 செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது.
