மது கடைகளில் வெளிநபர்கள் வேலை செய்தால் வழக்கு: டாஸ்மாக் எச்சரிக்கை

சென்னை: ‘மது கடைகளில் வெளிநபர் வேலை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சில மது கடைகளில் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல், தங்களின் நண்பர்கள், உறவினர்களை பணியில் அமர்த்தி உள்ளதாகவும், அவர்களுக்கு கூடுதலாக வசூலிக்கும் பணத்தில் இருந்து, தினசரி, 500 ரூபாய், 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் புகார்கள் எழுகின்றன.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார், குறிச்சியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். புகாரில், அந்த கடையில் பணிபுரிந்த வெளிநபரான சரத்குமார் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மது கடைகளின் வேலை நேரத்தில், மேற்பார்வையாளர் உட்பட அனைத்து பணியாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும். சம்பந்தம் இல்லாமல், யாரேனும் கடையில் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்படும்.

மேலும், கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது, சஸ்பெண்ட் உட்பட, துறை ரீதியான நடவடிக்கைள் எடுக்கப்படும்’ என்றார்.

ஆறு பேர் சஸ்பெண்ட்

இந்நிலையில், குறிச்சி, டாஸ்மாக் மதுபான கடையில், மதுபான பாட்டில் ஒன்றுக்கு, 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சேகர், சரவணன், விற்பனையாளர்கள் துரைபிரகாஷ், மதியகழன், வீராசாமி உட்பட, ஆறு பேரையும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐஸ்வர்யா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Source link