மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி தலைவர் முதல்வர் விஜய்: வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு – மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை: மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் இருப்பார் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

சென்னை பனையூரில் தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கூட்டணிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 அன்று நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினோம். மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டோம். அவரின் ஒருங்கிணைப்பில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டணி விஜய் தலைமையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும். புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் எடுக்கப்படும். கூட்டணியின் பெயர் பலமான அர்த்தங்களையும், அஜென்டாவையும் சொல்கிறது. மதசார்பின்மையையும், சமூக நீதியையும் நிலை நிறுத்தும் கட்சிகளும், தமிழகத்தின் உரிமைக்காக போராடும் கட்சியும் இங்கு உள்ளன. வரும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்போம்.

லோக்சபா தேர்தலில் இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இண்டி கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது. 2029 தேர்தலில் இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும், அவருக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார்.தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எங்களின் வேட்பாளரை நாங்கள் எங்கள் வேட்பாளரை சொன்னோம். இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்பது எனதுகருத்து இண்டி கூட்டணியின் ஒரு அங்கமே இக்கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது மாணிக்கம் தாகூர் கூறியதாவது: 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்.தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நேர்மையான ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணியின் அடித்தளம் வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link