வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் போது முறையான தணிக்கை இல்லாததால் அரசுக்கு ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் தலைமைத் தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை தெரிவிக்கிறது. 2023-24 நிதி ஆண்டிற்காக வெளியிடப்பட்ட இந்தத் தணிக்கை அறிக்கையில், பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வருவாய் அதிகரித்தாலும் தொடரும் இழப்புகள்
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மூலமாக தமிழக அரசு ரூ.19,013.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.28% அதிகமாகும். இருப்பினும், பதிவுகளின் போது ஆவணங்களைச் சரிபார்ப்பதில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் குளறுபடிகள் காரணமாகப் பெருமளவு வருவாய் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 647 தணிக்கைக்கு உட்பட்ட அலுவலகங்களில், வெறும் 114 அலுவலகங்களில் மட்டுமே மாதிரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 967 வழக்குகளில் ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.
சொத்து மதிப்பு குறைத்துக் காட்டுதல்
605 வழக்குகளில் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூ.85.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 63 வழக்குகளில் சொத்துக்களின் உண்மையான மதிப்பு மறைக்கப்பட்டு, ரூ.1.07 கோடி கட்டணக் குறைவு செய்யப்பட்டுள்ளது. வெண்பேடு மற்றும் வயலாநல்லூர் பகுதிகளில் 14.94 ஏக்கர் நிலம் தொடர்பான 4 பரிவர்த்தனைகள் ரூ.78.66 கோடிக்குக் கிரையம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதன் மதிப்பு மிக அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.71.16 கோடி மதிப்புக் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7.83 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் மற்றும் தாமல் பகுதிகளில் ரூ.100.08 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான படிவம் 26AS சான்றுகள் இருந்தபோதிலும், பணப் பரிமாற்றமே இல்லாதது போல் அதிகாரப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரூ.4.99 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரையில் நிலத்தில் இருந்த கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததால் ரூ.17.55 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு குறைபாடு
பதிவுத்துறையில் தணிக்கைக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு தணிக்கைக் குழுக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5,428 உள் தணிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், ரூ.323.7 கோடி மதிப்புள்ள 61,109 தணிக்கைப் பத்திகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரியாக ஆய்வு செய்யப்பட்ட 114 அலுவலகங்களிலேயே ரூ.96 கோடி இழப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 533 அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு வெளிவரக்கூடும் என சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.
