தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் சொத்து விவரங்கள், வாடகை நிலுவைத்தொகை, வங்கி வைப்பு நிதி மற்றும் வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வரவேற்பும் வலியுறுத்தலும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், வாடகை மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கோவில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் முக்கிய தகவல்களை 90 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகள், குத்தகைதாரர் விவரங்கள் மற்றும் வாடகை நிலுவைத் தொகை உள்ளிட்ட சொத்து விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
மேலும், கோவில்களின் வங்கி வைப்பு நிதி, சேமிப்புக் கணக்கு விவரங்கள், உபயதாரர்கள் வழங்கிய நன்கொடைகள், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள், சேவை கட்டணங்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
இதுதவிர, வரவு – செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், அறங்காவலர் குழு தீர்மானங்கள், அறநிலையத் துறையின் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவுகளையும் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் நடை திறக்கும் நேரம், பூஜை நேரங்கள், திருவிழாக்கள், ஸ்தல வரலாறு உள்ளிட்ட 11 வகையான தகவல்களை கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பதாகைகள் அல்லது அறிவிப்பு பலகைகள் மூலம் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தகவல் ஆணையரின் இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான ஆவணங்களுடன், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரும், இணை ஆணையருமான தங்கம், நவம்பர் 30ஆம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொரு கோவில்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த உத்தரவுகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் முத்து கணேஷன் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் ராஜ்குமார் வலியுறுத்துகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
