ஒத்துழைக்காத உடல், மருத்துவ உதவி தேவை: பல நினைவுகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிளாக் பாண்டி

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகர் பிளாக் பாண்டி, உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வழங்கினார். அதனைத் தொடர்ந்து 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் 9 சீசன்களில், ஆரவ், ரித்விகா, முகன் ராவ், ஆரி அர்ஜுன், ராஜு ஜெயமோகன், முஹம்மது அசிம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன், திவ்யா கணேஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள இந்த 10-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அது போக வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சீசனில் ‘மகாநதி’ சீரியலில் நடித்த லட்சுமி பிரியா, நடிகை ஷாதிகா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், சீரியல் நடிகை முத்தழகி, நடிகை தன்யா, ஒப்பனை கலைஞர் அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பிளாக் பாண்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள ப்ரமோவில், பாண்டிக்கு தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுவதால், மருத்துவரின் ஆலோசனைப்படி, அவரை இந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிக்பாஸ் சொல்ல, பிளாக் பாண்டி, வினோத் பாபு உள்ளிட்ட போட்டியாளர்கள் பலரும் அழுகின்றனர். இறுதியாக பல நினைவுகளை சுமந்து பிளாக் பாண்டி வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்று சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

Source link