புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்காக டில்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 4800 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 35க்கும் மேற்பட்ட சாலைகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் டில்லியில் நடக்கிறது. மாநாட்டை 4வது முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. டில்லி மாநகராட்சியின் சார்பில் 24 மணிநேரம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
நகரம் முழுவதும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுமார் 4800 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அது பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் செல்வோருக்காக 22 மாற்றுப்பாதைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உச்சி மாநாடு நடைபெறும் நாட்களில் விமான நிலையம் செல்லவும், பொது போக்குவரத்து பயன்பாட்டுக்காகவும் மெட்ரோவை பயன்படுத்துமாறு டில்லி போக்குவரத்து போலீசார் அறிவித்து இருக்கின்றனர்.
