புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.
2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அ.தி.மு.க, லட்சிய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 5-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இரு தொகுதிகளில் ஒன்றான தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், தட்டாஞ்சாவடியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 16-ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் வரும் 17-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால், தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனிடையே திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் சுமார் 26,797 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் அக்டோபர் 11-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்.
சுதந்திரமான, நேர்மையான மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியிருப்பது அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
