துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, இன்று வங்கதேசத்தை சந்திக்கிறது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை 10 வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக துபாயில் நடக்கிறது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றன.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 3 போட்டியில் 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் இன்று, ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
மந்தனா ‘நம்பர்-1’
இந்திய அணிக்கு துவக்கத்தில், துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (3 போட்டி, 152 ரன்), ஷபாலி வர்மா (104) என இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். அதிக ரன் குவித்தவர்களில் ‘டாப்-2’ இடத்தில் உள்ள இந்த ஜோடி, மீண்டும் அசத்தினால் எளிதாக பைனல் செல்லலாம். மற்றபடி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (33), பிரதிகா (36) ஏமாற்றம் தொடர்கிறது. இன்று மீண்டால் நல்லது.
பந்துவீச்சில் தீப்தி சர்மா இதுவரை 8 விக்கெட் சாய்த்துள்ளார். தவிர ஸ்ரீசரணி 7, பிரேமா, நந்தினி தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் மீண்டும் கைகொடுத்தால் வங்கதேசத்தை விரைவில் வீழ்த்தலாம்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில் இத்தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்புகிறது. இந்தோனேஷியா (129/8), இலங்கை (114/8), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (103/7) என மூன்று லீக் போட்டியிலும் 130 ரன்களை கூட எட்டவில்லை. சோபனா (77), திலாரா (53) என யாரும் நிலைக்கவில்லை. பந்துவீச்சில் மருபா (7), நஹிதா (5), ரபேயா (3) ஆறுதல் தருகின்றனர்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 23 ‘டி-20’ போட்டிகளில் மோதின. இந்தியா 21, வங்கதேசம் 2ல் வென்றன. கடைசியாக மோதிய 10 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
