-சிறப்பு நிருபர்-
‘ஊழல் வழக்குகளில் தொடர்பே இல்லாத தேவையற்ற ஆவணங்கள், சாட்சிகளை சேர்ப்பதால் வழக்கு விசாரணை முடிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது’ என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அசாம் மாநில கால்நடை பராமரிப்பு துறையில் போலி மருந்து ரசீதுகள் மூலம் 5.97 லட்சம் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாக கடந்த 1993ல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த குவஹாத்தி உயர் நீதிமன்றம், அத்துறையின் பொறுப்பாளராக இருந்தவரை குற்றவாளியாக அறிவித்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கியது.
இதனை எதிர்த்து பொறுப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, வினோத் கே.சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 13 (1) (டி)–ன் கீழ் ஒருவரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமெனில், அவர் முறைகேடாக பலன் பெற்று இருக்க வேண்டும்; அல்லது வேறு ஒருவரிடம் இருந்து நிதி ஆதாயம் பெற்று இருக்க வேண்டும். ஆனால், மனுதாரர் எந்த பணத்தையும் ஆதாயமாக பெறவில்லை என உயர் நீதிமன்றமே கண்டறிந்து உறுதி செய்துள்ளது. அப்படி இருந்தும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவரை தண்டித்தது தவறாகும்.
இவ்வழக்கில் அரசு தரப்பில், 62 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதிலும், உயர் நீதிமன்றம் வெறும், ஒன்பது சாட்சிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் எஞ்சிய சாட்சிகள் அனைத்தும் தேவையற்றவை என்பது தெளிவாகிறது. ஊழல் வழக்குகள் முடிவுக்கு வராமல், நீண்டகாலம் வரை இழுபறியாக நீடிப்பதற்கு தேவையற்ற ஆவணங்களும், வழக்குக்கு தொடர்பே இல்லாத சாட்சிகளும் தான் முக்கிய காரணம்.
இவ்வழக்கில் அரசு கருவூலத்தில் இருந்து பணம் விடுவிக்கப்பட்டபோது, அது யாருடைய வங்கி கணக்குக்கு சென்றது என்பது குறித்து விசாரணை முகமைகள் எந்த ஆய்வும் நடத்தவில்லை. எனவே, மனுதாரரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
