கல்லணை தண்ணீரை மலர் தூவி வரவேற்கக் காத்திருந்த விவசாயிகள் : மின்வெட்டால் அவதி!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்துவிட்டார். தொடர்ந்து கல்லணையில் கடந்த 6ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக் கால்வாய்களில் வரத் தொடங்கியுள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பகுதிக்குப் புதன்கிழமை இரவு 8.45 மணிக்குத் தண்ணீர் வந்தது. கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வரும் நிலையில் எஸ்.டி.ஒ செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஏற்பாட்டில் மேற்பனைக்காட்டில் பூஜைகள் செய்து தண்ணீரை மலர், விதை தூவி வரவேற்க ஷட்டர்களில் மாலை அணிவித்து மின் விளக்குகள் அமைத்துக் காத்திருந்தனர். தகவல் அறிந்து மேற்பனைக்காடு விவசாயிகளும் விவசாயிகளும் வந்திருந்தனர்.

தண்ணீர் ஷட்டரை வந்து சேரும் போது மின் தடை ஏற்பட்டதால் இருளில் செல்போன் வெளிச்சத்தில் பூஜை செய்து மலர்கள், நெல்மணிகள் தூவி கல்லணைத் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீரில் அடித்து வந்த புதர்களை டார்ச் வெளிச்சத்தில் இறங்கி சுத்தம் செய்து தண்ணீர் அடைப்பைச் சரி செய்து அனுப்பி வைத்தனர். ஒரு நல்லது நடக்கும் போது கூட மின்சாரத்தை நிறுத்தி இருளில் தள்ளினால் எப்படி? இந்த வருட விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை சிம்பாளிக்கா சொல்றாங்களா என்று முணுமுணுத்தனர் விவசாயிகள்.

Source link