'டாஸ்மாக்' முறைகேடுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன: அமைச்சர் விக்னேஷ் தகவல்

சென்னை: ”டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில், மாவட்ட மேலாளர்களுடன் நேற்று, அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை நடத்தினார்.

10 ரூபாய் பின், அவர் அளித்த பேட்டி:

கடந்த காலங்களில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வாங்கியவர்களை, 10 ரூபாயாக வாங்க சொன்னவர்கள் தான் தி.மு.க.,வினர்.

அவர்களால் கண்துடைப்பிற்காக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சிலரை தற்போது பணியில் சேர்த்திருக்கிறோம்.

இம்மாதம், 1ம் தேதி முதல் கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு மாவட்டத்தில் அதிக முறைகேடு நடக்கிறது என்றால், அதற்கு காரணமான பணியாளர்கள் மட்டுமின்றி, அந்த மாவட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

என் பெயரை பயன்படுத்தி, கடைகளில் பணம் வசூலிப்பதாகவும் தகவல் வருகிறது. இதுவரை, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

த.வெ.க.,வினர் உட்பட யாராக இருந்தாலும், தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது புகார் வந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மது வகைகள் கொள்முதல் செய்யப்படும், 11 நிறுவனங்களும் சமமாக தான் பார்க்கப்படுகின்றன.

நடவடிக்கை கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மீது, அமலாக்கத்துறை என்னென்ன குற்றம் சுமத்தியுள்ளதோ, அவை அனைத்தையும் முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்து இருக்கிறார். இதை எல்லாம் சொல்வது எதற்காக?

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான். அதற்கான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link