டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரானின், ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி முதல் மோதல் நீடித்து வருகிறது. அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் மீதான தாக்குதல் உட்பட பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாததால், மோதல் தொடர்கிறது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி நுழைவாயிலில் அமெரிக்காவின் போர்க் கப்பல் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்காவின், ‘எம்.கியூ., – 9 ரீப்பர் ட்ரோன்’ எனப்படும் உளவு பார்க்கும் சிறிய ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின், ஐந்து எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள், நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு சில மணி நேர இடைவெளியில், அமெரிக்காவின் அதிநவீன ‘டைவ் – எல்டி’ என்ற நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்துள்ளதாக, ஈரான் கூறியுள்ளது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நீர்மூழ்கி கப்பல் பழுதடைந்துள்ளதாகவும், அதில் எவ்வித ரகசியத் தகவல்களும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
