இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மதுராந்தகம் மரகதம் வெற்றிவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காரசார விவாதங்கள் உடன் அனல் பறந்தது. முதல்முறை முழு கூட்டத்தொடரும் நேரலை செய்யப்பட்டதால் லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இது முடிவுக்கு வந்ததை அரசியல் பரபரப்பு குறைந்துவிட்டதோ என எண்ணிக் கொண்டிருக்கையில், இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளை தவிர்த்து எஞ்சியுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் வெற்றிவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
