இதற்கிடையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தோழமைக் கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது. அதன்படி, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய தலைவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது, “நாங்கள் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அங்கு வெற்றி பெற்றவர்கள் கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் துரோக, செய்துவிட்டு ஆளுங்கட்சியை நோக்கி சென்றிருக்கிறார்கள். அதனால் அங்கே அதிமுக வெற்றி பெறுவதற்காக அமமுக உறுதியாக அவர்களுடன் சேர்ந்து போராடும்.
இந்த அரசாங்கம் ஒரு முதிர்ச்சியற்ற அரசாங்கம். ஏதோ மாற்றம் வேண்டும் என்று ஒரு தவறானவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்காள். இதை அவர்கள் உறுதியாக உணர தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டுக்கு இருண்ட காலமாக விஜய்யின் ஆட்சி அமைந்திருக்கிறது. விஜய் சினிமாவில் தான் ஹீரோ, ஆனால் உண்மையான வாழ்க்கையில் அவர் ஒரு மாபெரும் வில்லன். சினிமாவில் பார்த்த ஹீரோ நல்லவர் என்று நினைத்தோம், ஆனால் அவர் நல்லவர் இல்லை, அவர் மிகவும் தீமையானவர், சுயநலமிக்கவர். தனது நலத்திற்காக யாரையும் பலி கொடுப்பார், யாரையும் தூக்கி எறிவார். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அமமுக அதிமுகவுடன் உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.
