செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூரியின் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்து படத்தை வரவேற்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தாரதப்பட்டை முழங்க புலியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் அரங்கேறியது. இதன் நடுவே சூரி அந்த திரையரங்கிற்கு வருகை தந்தார். பின்பு நாயகி மஹிமா நம்பியாரும் வருகை தந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனிடையே படம் பார்க்க செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “இப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாடம். இப்படம் மீனவ மக்களுக்கானது. அதனால் இந்த படம் வெற்றி பெற்றால் அவர்களையே சாரும். படம் வெற்றி பெறும் என நம்புறேன். அது என்னை கூடுதலாக ஒரு நல்ல இடத்திற்கு எடுத்து செல்லும் என நினைக்கிறேன். இது போன்ற படங்களிலும் இனிமேலும் நடிப்பேன். நல்ல கதை வந்தால் சிட்டி கதைகளத்திலும் நடிப்பேன். நான் ஒரு நடிகன் தானே” என்றார்.
