தேசிய பங்குச் சந்தையின் IPO அளவு ரூ. 23,500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் வங்கி OFS மூலம் 15 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின் (NSE) ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டு (IPO) தொகையானது கணிசமாகக் குறைக்கப்படவுள்ளது. முந்தைய திட்டத்தின்படி ரூ. 30,000 கோடியாக இருந்த இந்தப் பங்கு வெளியிட்டுத் தொகை தற்போது ரூ. 22,500 முதல் ரூ. 23,500 கோடி வரை திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு விற்பனைத் திட்டத்தின் (OFS) கீழ் வழங்கப்படவிருந்த பங்குகளின் எண்ணிக்கையையும் பங்குச்சந்தை குறைத்துள்ளது. முன்பு 14.89 கோடியாக இருந்த பங்கு விற்பனை தற்போது 12.64 கோடி பங்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்கப்படும் பங்குகளின் பங்களிப்பு 6 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐபிஓ முக்கிய அம்சங்கள்!
ஐபிஓ வெளியீடு செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் (Anchor bidding) செப்டம்பர் 17 அன்று நடைபெற வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை பட்டியல் (Listing) செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ என்பது ஏற்கனவே பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையாகும் (OFS). அதாவது, இதன் மூலம் கிடைக்கும் நிதி நேரடியாக என்எஸ்இ நிறுவனத்திற்குச் செல்லாது.
பட்டியலிடப்படாத பங்குகளின் விலை!
ஐபிஓ தொடங்குவதற்கு முன்பாக, புதன்கிழதியன்று என்எஸ்இ நிறுவனத்தின் பட்டியலிடப்படாத பங்குகள் (Unlisted shares) ஒரு பங்கு தோராயமாக ரூ. 2,025 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. பங்குச்சந்தையின் நீண்ட காலப் பட்டியலிடும் பயணத்தில் முக்கியத் தடையைக் கடந்து, ஐபிஓ-வை நடத்துவதற்கான ஒழுங்குமுறை அனுமதியை என்எஸ்இ ஏற்கனவே பெற்றுள்ள நிலையில், இந்த நிதித் தொகை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசியப் பங்குச் சந்தையின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு மற்றும் பங்கு விற்பனை சலுகை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியன் வங்கி தனது பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளதால் இன்று (செப்டம்பர் 10) வியாழக்கிழமை அன்று இந்தியன் வங்கி பங்குகள் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓஎஃப்எஸ் மூலம் 15 லட்சம் ஈக்விட்டி பங்குகள் வரை விற்க இந்தியன் வங்கி முன்மொழிந்துள்ளது. இந்த முதலீட்டு விலகல் என்பது தேசியப் பங்குச் சந்தையில் இந்தியன் வங்கியின் தற்போதைய பங்குப் பங்களிப்பில் 17.91 சதவீதம் ஆகும். இந்த முன்மொழியப்பட்ட விற்பனைக்கான ஒப்புதல் கடிதத்தை செப்டம்பர் 9 அன்று தாக்கல் செய்துள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பரிவர்த்தனை நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியன் வங்கிக்கு முன்பாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கி இந்த வார தொடக்கத்தில், என்எஸ்இ ஐபிஓ-வின் ஓஎஃப்எஸ் மூலம் தனது பங்குகளில் சுமார் 35 சதவீத மதிப்பிலாான 76.90 லட்சம் என்எஸ்இ பங்குகளை விற்க செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. செப்டம்பர் 8 அன்று பங்குகள் எஸ்க்ரோ கணக்கிற்கு மாற்றப்பட்டன. மேலும் இந்த முதலீட்டு விலகல் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டிற்காக என்எஸ்இ-யிலிருந்து ரூ. 76.90 கோடியை ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
Source link
