அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உரிய நாள் ஆகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோர்களை வழிபட்டு, தானங்கள் செய்து, அவர்களை வணங்கினால் நாமும், நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாள் என்பதால், பித்ரு சாபம் மற்றும் பித்ரு தோஷங்களில் இருந்தும் விடுபடுவதற்கு உரிய பரிகாரங்களை செய்வதற்கும் ஏற்ற நாளாக அமாவாசை கருதப்படுகிறது.
ஆவணி அமாவாசை சிறப்புகள் :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது என்றாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. அப்படி தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போன்று ஆவணி மாதத்திலும் வரும் அமாவாசை முக்கியமானதாகும். இது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் பாவங்களை போக்கிக் கொள்ள ஏற்ற நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், அளவில்லாத நன்மைகளை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்நாளில் என்ன செய்யலாம்?
1. திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
2. முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.
3. வீட்டில் உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்ய வேண்டும். சந்தனம், குங்குமம் இட்டு, முன்னோர்களை நினைத்து, காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும்.
4. அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து செய்யும் காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, ஆவணி அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறலாம்.
ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?
வருடத்தில் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது நமது வேதம். அனைத்தையும் செய்யாவிட்டாலும் ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளில் மட்டும் அவசியம் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மகாளய பட்சத்தில் செய்ய வேண்டும். ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காகத்திற்கு உணவளியுங்கள் :
அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அமாவாசை நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்து காகத்துக்கு உணவிட்டு முன்னோர்களின் ஆசியை பெற வேண்டும். அமாவாசை அன்று காகங்களுக்கு உணவு அளித்த பிறகே நாம் உணவு உண்ண வேண்டும்.
குலதெய்வ வழிபாடு :
அதேபோல், மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து, குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு, புடவை, ரவிக்கை துணி, பழங்கள், மங்களப் பொருட்கள் வைத்து வணங்க வேண்டும். அந்தப் புடவை முதலான மங்களப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கள காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் குடிகொள்ளும்.
ஏழைகளுக்கு தானம் :
அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
Source link
