நேற்றைய தினம் திமுக சார்பாக மதுராந்தகம், தாராபுரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவிய நிலையில், முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் இடைத்தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர் சுகன்யா தாராபுரம் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.
அதாவது அண்ணா அறிவாலயம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் திமுக வேட்பாளர் சுகன்யா. அப்போது அவர் கூறுகையில் கழகத்தலைவரை சந்தித்தோம். என்னையும், தாராபுரம் மக்களையும் நம்பி இடைதேர்தலில் ஒரு வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக கழக தலைவர், எதிர்க்கட்சி தலைவர், கூட்டணி கட்சிகள், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. தாராபுரம் மக்கள் மீது நம்பிக்கையை வைச்சு களத்தில் இறங்குறேன். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுடைய வளர்ச்சிதான் என்னுடைய நோக்கம். மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். வெற்றியுடன் வந்து மீண்டும் சந்திக்கிறேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து திமுக தலைவர் உறுதியாக இருக்கிறார். வெற்றி நம்ம பக்கம்தான் உள்ளது. இப்போது உள்ள சூழ்நிலையில் நமக்குதான் வெற்றி. 100 சதவிகிதம் நான்தான் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தவெக ஆளுங்கட்சியாக உள்ளது. தாராபுரம் மக்களுக்காக அவர்கள் என்ன பண்ணி இருக்கிறார்கள். எல்லாமே எங்களுடைய கழக நிர்வாகிகள் தான் பண்ணிட்டு இருக்கீங்க. மக்களுக்கு மாற்றம் இல்லை. ஏமாற்றம் அடைஞ்சு இருக்காங்க. இப்போ ஆளுங்கட்சியாக அவர்கள் இருந்தாலும், களத்தில் திமுகதான் உள்ளது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட திமுகவை சார்ந்த மக்கள்தான் நல்லது பண்ணிட்டு இருக்காங்க. மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அபரிமிதமான வெற்றி பெறுவேன் எனவும் திமுக வேட்பாளர் சுகன்யா உறுதியாக தெரிவித்துள்ளார்.
