விஜய் தலைமையிலான கூட்டணி: முதலில் முன்மொழிந்த பெயர் வேற; திருமா செய்த முக்கிய மாற்றம்

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் முதலில் முன்மொழியப்பட்ட பெயரில் வி.சி.க தலைவர் திருமாவளவன் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டு மாற்றச் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என முன்மொழியப்பட்ட பெயரைத் திருமாவளவனின் ஆலோசனையின் பேரிலேயே ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என மாற்றியமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியல் களமும் காட்சியும் மாறியிருக்கிறது.  விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் ஆட்சி அமைப்பதற்கு 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், தி.மு.க தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சரானார். 

த.வெ.க அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் பங்கேற்றுள்ளன. சி.பி.ஐ, சி.பி.எம் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியே இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. ம.தி.மு.க-வும் ஆதரவு அளிப்பதாகக் கூறி இந்த கூட்டணியில் இணைந்தது. 

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயின் த.வெ.க தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியை பலப்படுத்த கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய 2 கட்சிகளும் பங்கேற்பதில்லை என்று அறிவித்துவிட்டன.

இதைத்தொடர்ந்து, சென்னை அருகே பனையூரில் நேற்று (09.09.2026) நடைபெற்ற 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார், அமைச்சர் வன்னி அரசு, வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி. துரை வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக விஜய் தான் ஒரு பெயரை மனதில் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதனால், விஜய் முன்மொழிந்ததாக இருக்கும் என்றே கருதப்பட்டது.

இந்நிலையில், த.வெ.க சார்பில் சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று முன்மொழியப்பட்ட பெயரை வி.சி.க தலைவர் திருமாவளவனின் ஆலோசனையின்படி, ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என திருத்தி அமைக்கப்பட்டது என்று வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என்று முன்மொழியப்பட்ட பெயர், நமது தலைவர் எழுச்சித்தமிழரின் அறிவார்ந்த ஆளுமையால் ‘ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 
மதச்சார்பற்ற தமிழ்தேசியம்.

சமூக நீதிக்கான தமிழ் தேசியம் என தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுப்பிரகடனத்தில் தலைவர்   பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன். 

மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சாதியவாத சக்திகளே தமிழ்சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் நம் தலைவர். விடுதலைச் சிறுத்தைகளின் உத்தி மாறலாம். இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை.” என்று சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Source link