குஜராத் மாநிலம், சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பரூக் (22). இவர் பிரபல மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து, சோபியாவுக்கும் அவரது தந்தை முகம்மது பரூக்குவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஆண் நண்பருடன் பேசக்கூடாது என அவரது தந்தை சோபியாவை கண்டித்தார். இதனிடையே, சோபியாவின் சகோதரர் ஹபீல் பரூக் தனது சகோதரியை எந்த ஆண்களிடமும் பேசக்கூடாது எனக் கண்டித்தார். இருப்பினும், இவர்களுக்கு சோபியா மீது தொடர்ந்து சந்தேகம் இருந்துவந்தது.
பின்னாளில், காதல் என்ற பெயரில் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், குடும்ப கவுரவம் கெட்டுவிடுமோ எனக்கருதிய தந்தை மற்றும் மகன் சேர்ந்து சோபியாவை கெல்ஜிபுரா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், ஹபீல் தான் ஆடையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து சோபியாவின் தலையில் பின்புறமாக வேகமாகத் தாக்கினார். அப்போது, முகம்மது பரூக்கும் ஹபீலுக்கு உடந்தையாகச் செயல்பட்டார். பின்பு, சோபியா உயிர் இழந்ததையடுத்து, அந்த உடலை அப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டுபோய் போட்டனர். பின்பு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இடித்துச் சென்று விட்டதாகவும், அதனால் சோபியா உயிர் இழந்ததாகவும் அவர்கள் காவல்துறையில் தகவல் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் இது விபத்து மரணம் தான் என காவல்துறையினர் கருதினர். ஆனால், இது திட்டமிடப்பட்ட கொலை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை மற்றும் மகன் என இருவரும் சேர்ந்து சமூகத்தில் குடும்பத்தின் நற்பெயர் கெட்டுவிடுமோ என்ற நோக்கத்தில் இந்த கொலையைச் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், வேதனையயும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு ரீல்ஸ் வீடியோவால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
