ரூ.6,126 கோடியில் தமிழகத்திற்கு 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.6,126 கோடி மதிப்பிலான 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்தம் 383 கி.மீ தொலைவிலான ரயில் பாதைகள் கூடுதல் வழிகளாகவும் இரட்டைப் பாதைகளாகவும் தரம் உயர்த்தப்படவுள்ளன.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டங்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 3 முக்கிய திட்டங்களின் விவரங்கள்:

அரக்கோணம் – ரேணிகுண்டா (3 மற்றும் 4-வது வழித்தடம்):

மும்பை – சென்னை இடையிலான அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட வழித்தடத்தில், 77 கி.மீ தொலைவுக்கு ரூ.1,936 கோடி செலவில் 3 மற்றும் 4-வது ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. 12 பெரிய பாலங்கள், 221 சிறிய பாலங்களுடன் 3 ஆண்டுகளில் நிறைவடையும் இத்திட்டம், ஆண்டுக்கு 7.21 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளைக் கையாள உதவும். இது எல்என்ஜி, நிலக்கரி மற்றும் ஆட்டோமொபைல் போக்குவரத்திற்குப் பெரிதும் உதவும்.

ஓசூர் – ஓமலூர் (இரட்டை ரயில் பாதை):

147 கி.மீ தொலைவிலான இந்த வழித்தடம் ரூ.1,948 கோடி செலவில் இரட்டைப் பாதையாக மாற்றப்படுகிறது. 20 பெரிய பாலங்கள், 359 சிறிய பாலங்களுடன் 4 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம், தர்மபுரி பகுதி மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்.

சேலம் – கரூர் – திண்டுக்கல் (இரட்டை ரயில் பாதை):

159 கி.மீ தொலைவுகொண்ட இந்த வழித்தடம் ரூ.2,242 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் இரட்டைப் பாதையாக உயர்த்தப்படவுள்ளது. 18 பெரிய பாலங்கள் மற்றும் 241 சிறிய பாலங்களைக் கொண்ட இத்திட்டம், சேலம் ஸ்டீல் பிளாண்ட், கரூர் சிமெண்ட் தொழிற்சாலைகள் போன்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தும்.

இந்த 3 திட்டங்களின் மூலம் ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து சாத்தியமாவதோடு, ஆண்டுக்கு ரூ.592 கோடிக்கும் அதிகமான தளவாடச் செலவு (Logistics cost) மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link