தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லெட்சுமி, கடைசியாக ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இந்த சூழலில் அவர் துல்கர் சல்மான் படங்களில் இனி நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு காரணமாக துல்கருடன் அவர் நடித்த கிங் ஆஃப் கோதா பட விமர்சனங்கள் தான் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து விரிவாக சமீபத்திய யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “2023-ல் ‘கிங் ஆஃப் கோதா’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு, அங்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காதோ எனத் தோன்றியது. நான் மட்டுமல்ல, துல்கர் மற்றும் படக்குழுவினரும் கேலிகளுக்கு ஆளானார்கள். எனது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் சொல்வது சரிதான் என்று பல நேரங்களில் நினைத்திருக்கிறேன்.
படத்தில் துல்கரை ‘ராஜுவேட்டா’ என்று அழைத்ததற்காகப் பலர் என்னைக் கேலி செய்தனர். ‘ஹலோ மம்மி’ (2024) படப்பிடிப்பின் போது ஒரு உதவி இயக்குநர் அதே வார்த்தையைப் பயன்படுத்தி என்னைக் கேலி செய்தபோது அது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதுபோன்று பல விஷயங்கள் நடந்தன. அதற்குப் பிறகு, துல்கருடன் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் மீண்டும் கிண்டல், கேலி நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் நானே அதனை மறுத்துவிட்டேன். இனிமேல் என்னால் துல்கருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தோன்றவில்லை. அந்தளவுக்கு அந்த விமர்சனங்கள் என்னைப் பாதித்துவிட்டன” என்றார்.
அபிலாஷ் ஜோஷி இயக்கிய முதல் படமான ‘கிங் ஆஃப் கோதா’வில், துல்கருடன் ஐஸ்வர்யா, ஷபீர் கல்லாரக்கல், பிரசன்னா, கோகுல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
