அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி, “ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து குதிரை பேரம் நடத்தி மறுத் தேர்தல் வரக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறது தவெக ஆட்சி. இவர்கள் தான் நேர்மையான அரசியலை தரப்போகிறோம் என்று மக்களிடம் சொல்லக்கூடியவர்கள். இந்த இடைத்தேர்தல் அவசியமற்ற தேர்தல். மக்களுடைய வரிப்பணத்திற்கு கேடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த தேவையற்ற இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு கட்சியுடைய பெயரில் நின்று வெற்றி பெற்று மறுபடியும் தேர்தலை உருவாக்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கொலை குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எல்லாமே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதைப் பற்றி முதல்வர் சட்டமன்றத்தில் பதில் சொல்வார் என்று நினைத்தால் அவர் ஏதோ பஞ்ச் டயலாக் பேசி பழைய கதையெல்லாம் பேசி இல்லாத பொய்களை சட்டமன்றத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் தான் அரசாங்கமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே தவிர மக்களுக்கு தேவையான மக்களுடைய பாதுகாப்பை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும், அதற்கு பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம். அப்படி இடம் மாற்றம் வேண்டும் என்றால் கலைஞர் கட்டிய சட்டமன்றம் இருக்கிறது. புதிய மருத்துவமனையை கட்டி, அந்த இடத்தில் சட்டமன்றமாக மாற்றலாம். ஏனென்றால் ஓமந்தூர் இடம் சட்டமன்றத்துக்காகவே கட்டப்பட்ட இடம். அதனால் அதை கூட பயன்படுத்தலாம். எதை கேட்டாலும் நிதி இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால், மக்களுடைய வரி பணத்தை விரயமாக்குவதற்கு எல்லா வழிகளையும் செய்கிறார்கள்” என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.
