சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் கிடைக்காத சூழலில் விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுக்குள் 34.92 வாக்கு சதவீதம் பெற்று தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக தவெக உருவெடுத்தது தமிழக அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 8%க்கு மேல் வாக்குகள் பெற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கு 8 சட்டமன்றத் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 8%க்கு மேல் வாக்குகள் பெற வேண்டும். அந்த வகையில் 233 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 35% வாக்கு சதவீதத்தை தமிழக வெற்றிக் கழகம் பெற்றிருந்ததால் அந்த கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அங்கீகாரம் 20 ஆண்டுகள் வரை தொடரும் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட கால தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்தால் அவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
