எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்றுகொண்டவராக இருந்த நடிகரும் உதவி இயக்குனருமான இடிச்சப்புளி செல்வராஜ் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகும் வரை அவரது படங்களில் மட்டுமே நடித்து வந்தார். எம்.ஜிழ.ஆர் முதல்வர் ஆனபிறகு தான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவராகவும் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவருடன் திரைத்துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கமாகப் பழகிய பலர் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான இடிச்சப்புளி செல்வராஜ்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 1968-ம் ஆண்டு ஒளிவிளக்கு, ராமன் தேடிய சீதை, இதய வீணை, ப்டிக்காட்டு பொண்ணையா, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும்.நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்து தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இடிச்சப்புளி செல்வராஜ், எம்.ஜி.ஆர் 1977-ம் ஆண்டு முதல்வர் ஆனபிறகு தான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். 1979-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மயுத்தம் படம் தொடங்கி, தனிக்காட்டு ராா, மூன்று முகம், தாய்வீடு, விஜயகாந்த் நடித்த வெற்றி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2009-ம் ஆண்டு வெளியான தொட்டுச்செல்லும் தென்றலே என்ற படத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் – இடிச்சப்புளி செல்வராஜ் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது திருமணத்திற்கு செல்ல முடியாத எம்.ஜி.ஆர், மறுநாள் இடிச்சப்புளி செல்வராஜை அவரது மாமனார் வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் செல்வராஜ் போலவே, அவரது தம்பியும் காமெடி நடிகருமான பாண்டுவும் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்தான்.
இன்னும் சொல்லப்போனால் தற்போது அ.தி.மு.க. கட்சியின் சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் கொடி பாண்டு டிசைன் செய்தது தான். அதேபோல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு போஸ்டர் ஒட்டாமல், ஸ்டிக்கர் மூலம் விளம்பரப்படுத்தலாம் என்று யோசனை கொடுத்தவரும் பாண்டு தான். அண்ணன் இடிச்சப்புளி செல்வராஜ் தம்பி பாண்டு இருவருமே எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான நபர்களில் ஒருவராக இருந்துள்ளனர்.
