முதல்வர் ஜோசப் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தில் பதிலுரை அளிக்கும் போது மிசா குறித்து பேசினார். அப்போது அவர் தாடையில் கை வைத்து சைகை காட்டியது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவருடைய இந்த அணுகுமுறையை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அவர், சட்டமன்றத்தில் கடைசி இரண்டு நாட்கள் மிக மோசமான, இதுவரை சட்டமன்ற காணாத அளவிற்கு ஒரு மாநிலத்தின் முதல்வர் சைகை மொழியில், உடல் மொழியில் பிரதான எதிர்க்கட்சியை பேசியிருந்தார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் முதல்வர் விஜய்யின் பரப்புரை இருந்தது. அதனை பரப்புரை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அது மேடையில் பேசக்கூடிய பேச்சாக இருக்கலாம். மேடையிலும் கூட அந்த பேச்சு சரியான ஒன்று அல்ல. ஆனால் மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள் பேசக்கூடிய ஒரு பேச்சை முதல்வர் சட்டமன்றத்தில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திரு விஜய் அவர்கள் காட்டுவதை போன்று உடல்ரீதியான சைகையை காட்டி ஒரு முன்னாள் முதலமைச்சரை, பிரதான எதிர்க்கட்சியின் தலைவரை கொச்சைப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் ஜவாஹிருல்லா.
அதோடு தன்னுடைய செய்கைக்காக முன்பு எப்படி மு.க. ஸ்டாலினை நேரடியாக சந்தித்த போது தேர்தல் நேரங்களில் உங்களை கடுமையாக பேசினேன். ஐ ஆம் சாரி அப்படி சொன்னாரோ, அதே போன்று ஒரு சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அதில் தன்னுடைய உரைக்கு I am Sorry என சொல்வது விஜய் சொல்வது தான் இதற்கு பிராயச்சித்தமாக அமையும் என வலியுறுத்தியுள்ளார் மமக தலைவர் ஜவாஹிருல்லா. அவர் முன்வைத்துள்ள இந்த கோரிக்கை தற்போது கவனம் பெற்று வருகிறது.
