தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துள்ள நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 5-வது படம் மண்டாடி. மதிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். படகு விளையாட்டை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியாகியுள்ள இந்த படம ரசிகர்களை கவர்ந்ததா?
களிங்கப்பட்டினத்தில் நடைபெறும் பாய்மரப் படகு பந்தயப் போட்டிகளில் பல ஆண்டுகளாக சாட்டாப்புலி (சுஹாஸ்) தலைமையிலான அணியே வெற்றி பெற்று வருகிறது. சாட்டாப்புலிக்கு எதிராக மல்லேஷம் (மிதுன் ஜெய் சங்கர்) ஒரு அணியை உருவாக்குகிறார். இதைச் சகித்துக்கொள்ள முடியாத சாட்டாப்புலியின் ஆட்கள், மல்லேஷத்தைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். அவரை காளி (சூரி) காப்பாற்றுகிறார்.
காளியும் களிங்கப்பட்டினத்தைச் சேர்ந்தவர்தான். அவர் சாட்டாப்புலியின் நெருங்கிய நண்பர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து பாய்மரப் படகு பந்தயப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு முனையா (சத்யராஜ்) பயிற்சி அளிக்கிறார். முனையாவின் மகள் ஏஞ்சலை (மகிமா நம்பியார்) காளி காதலிக்கிறார். தான் வளர்ச்சியடைவதற்காக சாட்டாப்புலி செய்த சதித்திட்டங்களால் முனையா உயிரிழக்கிறார்.
இந்தப் பிரச்சினைகளால் தான் காதலித்த ஏஞ்சலைப் பிரிய நேர்ந்த காளி, களிங்கப்பட்டினத்தை விட்டு வெளியேறுகிறார். மல்லேஷத்துக்கு பாய்மரப் படகு பந்தயப் போட்டிகளில் பயிற்சி அளித்து, அவரை வெற்றிபெறச் செய்வதாக சாட்டாப்புலிக்கு காளி சவால் விடுகிறார். அந்தச் சவாலில் காளி வெற்றி பெற்றாரா? காளிக்கு சாட்டாப்புலி செய்த துரோகம் என்ன? காளியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஏஞ்சல் ஏன் அவரை விட்டு விலகினார்? தனது அணியை வெற்றிபெறச் செய்வதற்காக இறுதியில் காளியே அந்த அணியில் இணைய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? என்பதே ‘மண்டாடி’ திரைப்படத்தின் கதை.
காளி என்ற மாஸ் கேரக்டரில் சூரி சிறப்பாகப் பொருந்தியுள்ளார். அவரது உடல்மொழியும், மேனரிசங்களும் அப்படியே ஒரு மீனவரைப் பிரதிபலிக்கின்றன. வில்லன் கதாபாத்திரத்தில் சுஹாஸ் அசத்தியுள்ளார். குறிப்பாக வசனங்களின் மூலம் வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் அவர் காட்டிய நடிப்பு வேறுபாடும் நன்றாக உள்ளது. மகிமா நம்பியார் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். முக்கியமான கேரக்டரில், சத்யராஜ் நடித்துள்ள ஹீரோவின் குருவாக கண்ணியமாக அமைந்துள்ளது.
ஏஞ்சலின் மகனாக நடித்துள்ள மிதுன் ஜெய் சங்கரின் நடிப்பு ஓரளவுக்கு நன்றாக உள்ளது. பாய்மரப் படகு பந்தயப் போட்டிகள் என்ற சவாலான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். போட்டிகளை மையமாகக் கொண்ட பகுதி புதுமையாக உள்ளது. ஆனால் அதைச் சுற்றி பின்னப்பட்டுள்ள கதையைத் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்த்துவதில் இயக்குநர் தடுமாறியுள்ளார்.
இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக ஜி.வி. பிரகாஷின் இசையும், எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவும் ‘மண்டாடி’ படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளன. உண்மையான பாய்மரப் படகு பந்தயத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தனது காட்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கதிர். குறிப்பாக போட்டிக் காட்சிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. பாய்மர படகு போட்டி என்ற கதைக்களம் மாறுபட்ட ஒரு நேர்மையான முயற்சியாக ‘மண்டாடி’ அமைந்துள்ளது.
இந்தக் கதைக்கு சூரி, சுஹாஸ் போன்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர்கள் கிடைத்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சூரிக்கு இணையான வகையில் சுஹாஸின் கதாபாத்திரத்தையும் இயக்குநர் வலுவாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸை உருவாக்கியபடியே நகரும் திரைக்கதைக்கு, இரண்டாம் பாதியில் இந்தக் குழப்பங்களுக்கு ஒவ்வொன்றாக விடை அளிக்கிறார் இயக்குநர். ஆனால் ஃப்ளாஷ்பேக் காட்சியை இன்னும் சுவாரஸ்யமாகவும், த்ரில்லிங்காகவும் உருவாக்கியிருக்கலாம்.
ஹீரோவுக்கு நெருக்கமாக இருந்த வில்லன் அவருக்குத் துரோகம் செய்வது, அவரை சொந்த ஊரை விட்டு வெளியேறச் செய்வது போன்ற கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அதே பழைய ஃபார்முலாவை மீண்டும் இந்த படத்தில் எதிரொலிக்கிறது. படகுப் போட்டிக் காட்சிகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியும், சுழல் நீர் காட்சியும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. எத்தனை தடைகள் வந்தாலும் ஹீரோ இறுதியில் வெற்றி பெறுவது திரைப்படங்களில் வழக்கமான ஒன்றுதான். ‘மண்டாடி’ படத்திலும் அதுவே நடைபெறுகிறது.
