புதுடில்லி: ” டில்லியில் பயங்கரவாதிகள் லால் மந்தீர் கோவிலை தாக்க திட்டமிட்டனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக திட்டத்தை மாற்றி செங்கோட்டையில் தாக்குதல் நடத்தி உள்ளனர்,” என என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
.கடந்தாண்டு நவ., 10ல், டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. காரை ஓட்டிய, ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., இது பயங்கரவாத தாக்குதல் என உறுதி செய்தது.இந்த விவகாரத்தில், ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றிய மூன்று டாக்டர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிராக, 4,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தது. அதில் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்கள் நூஹ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளான். முகமது நபி மற்றும் அவன் கூட்டளி ஷாஹீன் சயீத் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்களில் இருந்த பிடிஎப் ஆவணங்களில், யூரியா நைட்ரேட் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து எடுக்கும்மாற்று முறைகளையும் பயங்கரவாதிகள் கொண்டு இருந்தனர். நபியின் அறையில் இருந்து சிறுநீர் நிரம்பிய பிளாஸ்டிக் பை ஒன்று இருந்ததை சாட்சி ஒருவர் உறுதி செய்துள்ளார். அது தொடர்பாக அவர் ஏற்கனவே, நபியின் நண்பர் சோயிப் நண்பரிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
நூஹ் பகுதியில் தங்கியிருந்த போது, நபி ஆடைகள் வாங்கி அதற்கு ரொக்கமாக பணம் செலுத்தி உள்ளார். இதுவும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் ஆகும்.
பபயங்கரவாதிகள் முதலில் டில்லியில் உள்ள லால் மந்தீர் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால், மத்திய டில்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததால், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றி செங்கோட்டைக்கு சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மாலை 6:37 மணியளவில் சன்ஹாரி மசூதி கார் நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். பிறகு லால் பார்க் நோக்கி பயங்கரவாதிகள் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, யூ டர்ன் எடுத்து செங்கோட்டைக்கு சென்றனர். 6:50 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது.2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் செங்கோட்டைக்கு முகமது நபி 12 முறை சென்றுள்ளான். கடைசியாக மே 1ம் தேதி சென்றுள்ளான். அந்த இடத்தை சுற்றி பார்க்க செல்லவில்லை. அங்கு தாக்குதல் நடத்துவதற்கு நோட்டமிடவே சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தங்களது மொபைல்போனை அணைத்து வைத்து உள்ளனர். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
