புதுடில்லி: இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஹோட்டல்களை, தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004 – 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். இந்த கால கட்டத்தில், ஒடிஷாவின் புரி மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சியில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள், பீஹாரைச் சேர்ந்த சுஜாதா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., தனித்தனியாக வழக்குப் பதிந்துள்ளன.
இந்த வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த ஆண்டு அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.
இந்த நிலையில், ரயில்வேக்கு சொந்தமான ஹோட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரது அனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 9 பேர் மீது ஊழல் வழக்கைப் பதிவு செய்ய டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார். தற்போது பீஹாரின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
