பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொண்டு வெல்வதில் வல்லவர் காளி(சூரி). அவருக்கும், சட்டபுலிக்கும்(சுஹாஸ்) பயிற்சி அளித்தவர் சத்யராஜ். காளியும், சட்டபுலியும் நண்பர்களாக இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு செல்கிறார் காளி. பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நெடுந்தூரம் வந்து வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் தன் முன்னாள் காதலியின் மகனை காப்பாற்ற சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் காளி. பாய்மர படகுப் போட்டியே வேண்டாம் சாமி என இருந்த காளி தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் காளியுடன் மோதுவது வேறு யாரும் அல்ல அவரின் நண்பராக இருந்த சட்டபுலி தான். காளிக்கும், சட்டபுலிக்கும் இடையே விரோதம் எப்படி வந்தது, ஏன் இப்படி மோதிக் கொள்கிறார்கள் , யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதே மண்டாடி படத்தின் கதை ஆகும்.
பாய்மர படகுப் போட்டி பின்னணியில் கதையை உருவாக்கியிருப்பது மண்டாடிக்கு பெரிய பலமாக அமைந்துவிட்டது. இறுதியில் வரும் படகுப் போட்டி காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படகுப் போட்டி போட்டினு படம் முழுவதும் பில்ட்அப் கொடுத்து இறுதியில் அதை பார்க்கும் போது ஏற்படும் ஃபீல் நன்றாக இருக்கிறது.
மண்டாடிக்கு தன் இசை மூலம் பெரும் பலம் கொடுத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த கதாபாத்திரம் அடுத்து இதை தான் செய்யும் என எளிதில் கணிக்கும்படி இருக்கிறது. இருந்தாலும் கதாபாத்திர தேர்வை சரியாக செய்து அவர்கள் மூலம் நம்மை திருப்தி அடைய செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
காளி கதாபாத்திரத்திற்கு சூரி தான் மிகவும் பொருத்தமானவர் என படம் பார்க்கும் அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது சூரியின் நடிப்பு. அவர் இடத்தில் வேறு யாராவது ஹீரோவாக நடித்திருந்தால் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்குமா என சந்தேகப்பட வைக்கிறார் சூரி. காளியின் நண்பனாக இருந்து எதிரியாக மாறும் கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தியிருக்கிறார் சுஹாஸ்.
காளியின் குருவான சத்யராஜ் மற்றும் காளியிடம் பயிற்சி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி புகழ் மிதுன் ஜெய் சங்கரின் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கிறது. இருவரும் அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்கள். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் மஹிமா நம்பியார். பிளாஷ்பேக் கொஞ்சம் லேட்டாக வந்தது லைட்டாக மைனஸாகிவிட்டது.
பாய்மர படகுப் போட்டி தொடர்பான படம் என்றால் ஆண்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் மண்டாடி அப்படி இல்லை. தன் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் கவனமாக இருந்தது போன்று தெரிகிறது. கிராமத்து தலைவர் ஒரு பெண்.சட்டபுலி மனைவி ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் கதாபாத்திரம் இல்லை. தன் மனதில் பட்டதை சொல்கிறார். காளிக்கு பணம் தேவைப்படும் போது அதை கொடுப்பது அவரின் தாய். ஒரு பெண்ணால் தான் சொந்த ஊருக்கு திரும்புகிறார் காளி. இயக்குநரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
மண்டாடியில் குறையே இல்லாமல் இல்லை. ஆனால் அந்த குறைகள் பெரிதாக தெரியாத அளவுக்கு கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். மண்டாடி- நம்பி பார்க்கலாம்.
