இந்திய ரயில்வே, பயணிகள் தெரிவிக்கும் புகார்களை வகைப்படுத்துதல், பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் முறையை மேம்படுத்துவதற்காகத் தனது ‘ரயில்வே மதத்’ (RailMadad) செயலியில் பல முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்துடன் (CRIS) கடந்த செப்டம்பர் 7 அன்று நடத்திய காணொலிக் காட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முக்கிய மாற்றங்கள் மற்றும் திட்டங்கள்:
ரயில்களில் தண்ணீர் தொடர்பான புகார்கள்:
ரயில்களில் தண்ணீர் இல்லையென்ற புகார் எழும்போது, அது முந்தைய தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையத்தின் (Previous watering point) கணக்கில் கொண்டு வரப்படும். இதற்காகக் சி.ஆர்.ஐ.எஸ் புதிய தொழில்நுட்ப வசதியை உருவாக்கும். மேலும், கோட்டக் கட்டுப்பாட்டு அறைகள் ‘தண்ணீர் வசதி’ என்ற புகாரை ‘பெட்டி பராமரிப்பு’ என்று தேவையின்றி வகைமாற்றம் செய்வதைத் தவிர்க்குமாறு மண்டல ரயில்வேக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் உணவுக் கழிவுப் புகார்கள்:
வந்தே பாரத் ரயில்களில் இருக்கைப் பகுதிகளில் எஞ்சிய உணவுப் பொருட்கள் கிடக்கின்றன என்று பயணிகள் பதிவிடும் புகார்கள், ரயில்வேக்கு பதிலாக ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நேரடியாகச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் சரியான அதிகாரிகளால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
துப்புரவு ஊழியர்கள் இல்லாத (OBHS) ரயில்கள்:
ரயில்களில் துப்புரவு ஊழியர்கள் (OBHS) இல்லாத பட்சத்தில், உடனடியாக உதவி செய்யும் கோட்டத்தின் மீது தவறு சுமத்தப்படாமல், உண்மையில் எந்தக் கோட்டத்தின் குறைபாடால் பிரச்சனை ஏற்பட்டதோ அந்த கோட்டத்திற்குப் புகாரை அனுப்பும் புதிய முறை உருவாக்கப்படும்.
ஓ.டி.பி (OTP) மூலம் பின்னூட்டம் (Feedback) அளிப்பதில் மாற்றம்:
புகார் தீர்க்கப்பட்ட பிறகு பயணிகளிடம் OTP/லிங்க் மூலம் கருத்து கேட்கும் தற்போதைய முறையில் சில சிரமங்கள் உள்ளன. இதைக் தவிர்க்க, பயணிகள் கருத்தைப் பதிவு செய்ய மாற்று வழிகளும், OTP வரவில்லை என்றால் புகாரை முடித்து வைப்பதற்கான (Close) புதிய நடைமுறையும் ஆராயப்பட்டு வருகிறது.
பெட்கவர்/வாஷ்பேசின் ஊழியர்களின் விவரங்கள்:
‘ரயில்வே மதத்’ செயலியில் ஏற்கனவே துப்புரவு ஊழியர்களின் எண்கள் உள்ளன. இனி பயணிகள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், துணி/பெட்கவர் வழங்கும் ஊழியர்கள் (Linen staff) மற்றும் ‘கோச் மித்ரா’ ஊழியர்களின் விவரங்களும் செயலியில் சேர்க்கப்படும்.
நேரம் மாற்றப்பட்ட (Rescheduled) ரயில்கள் மீதான புகார்கள்:
ஒரு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டால், அந்த ரயில் தொடக்க நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே பயணிகள் புகார் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்பக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும்.
ஒரே பி.என்.ஆர் (PNR) மூலம் தொடர் புகார்கள் பதிவு:
ஒரே சாதனம் (Device) அல்லது பி.என்.ஆர் எண்ணைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் ஒரே மாதிரியான பல புகார்களைத் திரும்பத் திரும்பப் பதிவிடுவதைக் கட்டுப்படுத்த சி.ஆர்.ஐ.எஸ் நடவடிக்கை எடுக்கும்.
ரயில் மற்றும் ரயில் நிலையப் புகார்களைப் பிரித்தல்:
ஓடும் ரயிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தவறாக ‘ரயில் நிலையம்’ என்ற பிரிவில் பதிவிடப்படும் புகார்களை, சரியான அதிகாரிகள் ‘ரயில்’ என்ற பிரிவிற்கு மாற்றும் சிறப்பு வசதியும் கொண்டுவரப்பட உள்ளது.
மேலும், புகார்களின் நிலவரத்தைக் கண்காணிப்பதற்காகச் சி.ஆர்.ஐ.எஸ் நிறுவனம் ‘புதிய ரயில்வே மதத் டேஷ்போர்டு’ (New RailMadad dashboard) ஒன்றை உருவாக்கியுள்ளது.
