“இதுதான் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?”

உயிருக்கு ஆபத்து எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை. இது தான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர்  அவரது வீட்டிற்கு அருகிலேயே  கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் காவல் துறையில் பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (08.09.2026)  திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு (09.09.2026) பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக  பிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்குத் துணிச்சலைக் கொடுத்துள்ளது.  

உயிருக்குப் பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த  விஷயத்தில் கடமையைச் செய்யத் தவறிய ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்த கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?  என வினா எழுப்புகின்றனர். சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link