உலகளாவிய முதலீட்டாளர்களை சந்திக்கவும், முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் விஜய், செப்டம்பர் 16-ம் தேதி வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ கார் பந்தய போட்டி நாளை மறுநாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 11,12) 12 ஆகிய நாட்களில் சில்வர்ஸ்டோனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக லெ மான்ஸ் கோப்பை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அந்த வார இறுதியில் போட்டியிடும் இந்திய ஓட்டுநர்களுக்கு ஆதரவளிப்பார் என்றும் லெ மான்ஸ் கோப்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகரும், கார் ரேஸ் வீரருமான அஜித் குமார், விராஜ் நிறுவனத்தின் அஜித் ரெட்ஆன்ட் அணிக்காக LMP3 புரோ/ஆம் பிரிவில் பிரான்சின் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து போட்டியிட உள்ளார். முன்னாள் ஃபார்முலா ஒன் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் LMP3 பிரிவில் அஜித் ரெட்ஆன்ட் ரேசிங் அணிக்காக முற்றிலும் இந்திய ஜோடியாக இணைந்துள்ளனர்.
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the… pic.twitter.com/pZiZOKy7yW
— Le Mans Cup (@LeMansCup) September 10, 2026
ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஒலிம்பிக் நகரம்
முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார், “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
