கோவை: கோவையை சேர்ந்த முதிய தம்பதியை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என மிரட்டி, 5.50 கோடி ரூபாயை, சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.
கோவையை சேர்ந்த 78 வயது முதியவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மனைவியுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், கேரளாவில் சமூக விரோத கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அதிர்ச்சி அளித்தது.
இதுதொடர்பாக, விசாரணை நடப்பதாகவும், விசாரணையில் சிக்காமல் இருக்க, தாங்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். விசாரணை முடிந்ததும், பணம் திருப்பி வழங்கப்படும் என, நம்ப வைத்தனர். மர்ம கும்பலின் பேச்சை நம்பிய முதியவர், சில நாட்களில், இரண்டு தவணைகளில் மொத்தம், 5.50 கோடி ரூபாயை வங்கி கணக்கு வாயிலாக அனுப்பியுள்ளார்.
இதுமட்டுமின்றி, முதிய தம்பதியர், வேறு யாரிடமும் தகவல் தெரிவிக்காத வகையில், வீடியோ அழைப்பு மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கும்பல் கண்காணித்தது. இதனால், தாங்கள் உண்மையிலேயே போலீஸ் விசாரணையின் கீழ் இருப்பதாக அவர்கள் நம்பியுள்ளனர்.
இதற்கிடையே, மேலும், 3 கோடி ரூபாய் தேவை என, மர்ம கும்பல் கூற, தன் மனைவி பெயரில் வங்கியில் இருந்த நிரந்தர வைப்பு தொகையை முன்கூட்டியே எடுக்க, முதியவர் வங்கியை அணுகியுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகையை அவசரமாக எதற்காக எடுக்க வேண்டும் என, வங்கி அதிகாரிகள் கேட்டபோது, தொழில் தேவைக்காக என, அவர் தெரிவித்துள்ளார். முதியவர் மீது சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவித்தனர்.
வங்கிக்கு நேரடியாக சென்ற சைபர் கிரைம் போலீசார், முதிய தம்பதியரிடம் பல மணி நேரம் பேசி, நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். அப்போது தான், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் செயல்படும் மோசடி கும்பலின் வலையில் அவர்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அடுத்து, 3 கோடி வைப்புத்தொகையை எடுக்கும் முடிவை தம்பதியர் கைவிட்டனர். இந்த மோசடி தொடர்பான புகாரை, சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
