கோபி: பத்திரம் கிரையம் செய்ய, ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கவுந்தப்பாடி சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தரை, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர், கார்த்திகேயன், 47. இவர் தனது பத்திரத்தை கிரையம் செய்ய வேண்டி, கவுந்தப்பாடியில் இயங்கும் கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை சமீபத்தில் அணுகியுள்ளார். அப்போது அதன் சார்பதிவாளர் சங்கர், 42, என்பவர் ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கார்த்திகேயன் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாரளித்திருந்தார்.
இதனால் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் போலீசார் கவுந்தப்பாடி சார்பதிவாளர் ஆபீசில் மறைந்திருந்தனர். இந்நிலையில் இன்று செப்.,10ம் தேதி 6:30 மணிக்கு, 7 லட்சம் ரூபாய் பணத்துடன், கவுந்தப்பாடி சார்பதிவாளர் ஆபீசுக்கு கார்த்தியேன் சென்றார். அப்போது வெற்றி, 30, என்ற பத்திர எழுத்தர் மூலம், பணம் பெற்றதாக, சார்பதிவாளர் சங்கர் உட்பட இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கவுந்தப்பாடி சார்பதிவாளர் ஆபீசில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
