அரையிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ரிபாகினா, கோகோ காப் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 27, சீனாவின் கின்வென் ஜெங் 23, மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா, இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 3-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் 22, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 19, மோதினர். இரண்டு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் கோகோ காப் 2-6, 7-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்வெரேவ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 29, நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்சுல்ப் 30, மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது முறையாக (2020, 2021, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் கரன் கச்சனோவ் 30, பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் 21, மோதினர். இதில் கச்சனோவ் 6-2, 7-5, 3-2 என முன்னிலையில் இருந்த போது, காயத்தால் பெல்ஜியம் வீரர் பாதியில் விலகினார். இதனையடுத்து கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

‘நம்பர்-1’ இடம்

யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியதால், அடுத்து வெளியாக உள்ள டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர்-1’ இடத்தை கஜகஸ்தானின் ரிபாகினா உறுதி செய்தார். இதன்மூலம் 99 வாரம் முதலிடத்தில் இருந்த பெலாரஸ் வீராங்கனை சபலென்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

51 ஆண்டுகளுக்கு பின்

யு.எஸ்., ஓபன் அரையிறுதியில் இம்முறை, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘டாப்-4’ வீராங்கனைகள் (சபலென்கா, ரிபாகினா, ஜெசிகா, கோகோ காப்) விளையாடுகின்றனர். இதற்கு முன், 1975ல் இப்படி பங்கேற்றனர்.

Source link