புதுடில்லி: வேளாண் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில், மலேசியா, திமோர்- லெஸ்டே மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் மத்திய அரசு தனித்தனியாக இருதரப்பு பேச்சு நடத்தியுள்ளது.
டில்லியில் நடைபெற்ற 9வது ஆசியான் – இந்தியா வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மூன்று நாடுகளின் வேளாண் அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
மலேசிய வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் முகமது பின் சாபுவுடன் நடந்த பேச்சில், வேளாண் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
திமோர்–லெஸ்டே நாட்டின் வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் வனத்துறை அமைச்சர் மார்கோஸ் டா குரூஸ், வேளாண் சவால்களை எதிர்கொண்டு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவுடன் வலுவான நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு தேவை என வலியுறுத்தினார்.
இந்தியாவின் சிறந்த வேளாண் நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
மியான்மர் வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சர் மின் நாங் உடனான பேச்சில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
